தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்துடன் கூடிய பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வசந்தபாலன். ஆல்பம் , வெயில், அங்காடி தெரு, அரவான் , காவிய தலைவன் என வசந்தபாலனின் திரைப்படங்கள் தனித்துவ அடையாளங்களை கொண்டிருந்தன. இந்த நிலையில் வசந்தபாலன் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கையில் எடுத்திருக்கும் திரைப்படம்தான் ‘ஜெயில்’ . இந்த படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ளார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வசந்தபாலன் , படத்தின் கதையை முழுக்க முழுக்க ஐ.சி.யுவில் இருந்து எழுதினேன் என கூறி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிய சூழலில் பல திரைத்துறை பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர். அவற்களுள் வசந்தபாலனும் ஒருவர். தீவிர சிகிச்சை எடுத்து வந்த வசந்தபாலன் ‘கலை ஒருவனை விடுதலை’ செய்யும் என்பதை புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது அது உண்மையாகிவிட்டது என்கிறார்.







ஒரு கையில் மருந்து ஏறிக்கொண்டிருக்க , மறு கையில் கதை எழுதினாராம் வசந்தபாலன் . கொரோனாவால் பாதிக்கப்பட்ட வசந்தபாலன் ஒருமுறை நர்சிடன் ‘ஐ காண்ட் பிரீத் ‘ என கூற , தனிமையில் இருந்த அவருக்கு அந்த வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்க தொடங்கியதாம் . உடனே அதனை பாடலாக எழுதி ஜி.வி.பிரகாஷிற்கு அனுப்பி மெட்டமைத்து தரும்படி கேட்டாராம். அதற்கு ஜி.வி.பிரகாஷ் ‘சார் நீங்க ஐ.சி.யுல இருக்கீங்க’ என கூற , அதற்கு பதிலளித்த அவர் ’நீங்க இதை செய்துக்கொடுத்தால் நான் ஹாப்பியாக ஃபீல் பண்ணுவேன் ‘ என்றாராம். உடனே மெட்டமைத்து , வாட்ஸப்பில் அனுப்ப , அதனை அறிவுக்கு அனுப்பி பாட வைத்தாராம் வசந்தபாலன்.அந்த பாடல்தான் நகரோடி.






நல்ல கதை தன்னிடம் இருந்தும் , கதாநாயகர்கள் தேடி  உடைந்து நின்ற நிலையில் , ஜி.வி.பிரகாஷ் கைப்பிடித்தது , ஒரு நண்பனின் ஆறுதலை பெற முடிந்தது என்கிறார் வசந்த பாலன் .அவர் இந்த படத்திற்காக  செய்த உழைப்பையும் , சில காட்சிகளின் நடிப்பையும் பார்க்கும் பொழுது உண்மையில் வியந்தேன் என பெருமையாக தெரிவிக்கிறார் வசந்தபாலன், படத்தின் தலைப்பு குறித்து பேசும் பொழுது, ஜெயில் என்பது சிறைச்சாலை பற்றியது அல்ல. நீங்கள் எங்கெல்லாம் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கிறீர்களோ அங்கெல்லாம் உங்கள் காலடியில் ஒரு ஜெயில் முளைக்கும் என படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் இயக்குநர். ஜெயில் படத்தில் ஜிவிக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்க ராதிகா சரத்குமார், ரவி மரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படம் நாளை (டிசம்பர் 9 ) ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.