தான் இயக்கிய அரவான் படம் ஏன் தோல்வியடைந்தது என இயக்குநர் வசந்தபாலன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்த படம் “அரவான்”. ஆல்பம், வெயில், அங்காடி தெரு ஆகிய படங்களை தொடர்ந்து 4வதாக வசந்தபாலன் இப்படத்தை இயக்கினார். அரவான் படத்தில் ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா ஜோஸ் கவி, சிங்கம்புலி, பரத், ஸ்வேதா மகன், அஞ்சலி என பலரும் நடித்திருந்தனர். பாடகர் கார்த்திக் இப்படத்துக்கு இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அரவான் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வசந்தபாலன் அரவான் படம் ஓடாமல் போனதற்கான காரணம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “வேலராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை பாரதிராஜா படமாக பண்ணப்போகிறார் என்பது 20 வருடமாக சினிமாவுலகில் உலா வரும் பேச்சாக இருந்தது. அது அவரின் கனவுப்படமாக இருந்தது. இங்கு வரலாற்று கதை என்பது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என ராஜாக்கள் உலகம் என்பதை தான் அதன் ஆசிரியர்கள் பிரதிபலித்திருப்பார்கள். ஆனால் குற்றப்பரம்பரை நாவலில் வேலராம மூர்த்தி எளிய மக்களின் வாழ்க்கையை 18ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என்பதை விவரித்திருப்பார். அதை படித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
களவு மற்றும் காவல் எவ்வளவு பெரிய கலையாக இருந்தது என தெரிவித்திருப்பார். இன்னைக்கு பார்த்தாலும் அது பெரிய வரலாற்று புனைவாக காணலாம். எப்படி களவு கலையாக இருந்தது என அதன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்துக் கொண்டே இருந்தது. வேல ராமமூர்த்தியின் அந்த கதையில் ஒரு அழகான பிம்பம் இருந்தது. வேறொரு வகையில் இந்த கதையை நாம் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.
களவில் அவ்வளவு நுணுக்கங்கள் இருப்பதை கண்டு தொடர்ந்து இலக்கியம் சார்ந்த வாசித்து கொண்டிருந்தேன். அப்போது சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவல் வெளியானது. கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறேன். 700வது பக்கத்தில் தான் அவர் ஒரு சிறுகதை ஒன்றை சொல்கிறார். எனக்குள் இருந்த தாகம் இதை படித்தவுடம் படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இதுவரை நான் பண்ணிய படங்களில் ரொம்ப கஷ்டப்பட்ட படம் அரவான் தான். பெரிய பட்ஜெட், ஹீரோ, இசையமைப்பாளர் என எதுவுமே இல்லாத காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம் அது. ஆர்ட் டைரக்டர் ரூ.25 லட்சத்தில் இரண்டு கிராமங்கள் செட் போட்டு கொடுத்தார். 18 ஆம் நூற்றாண்டை கண்முன் கொண்டு வர எந்த அளவு குறைந்த செலவில் எடுக்க முடியுமோ பண்ணினோம். பாகுபலி படத்துக்குப் பின் வரலாற்று கதைகளில் ரசிகர்களின் கவனம் என்பது வந்து விட்டது. ஆனால் அன்றைக்கு நாங்கள் குறைவான சம்பளத்தில் வேலை செய்தாலும் வெறித்தனமாக வேலை செய்தோம்.
ஒரு படத்துக்கு ரொம்ப முக்கியமான விஷயம் கதையும், திரைக்கதையும் தான். அது எப்படி ரசிகர்களை சென்றடைகிறது என்பது முக்கியம். நாங்கள் திரைக்கதையில் செய்த தவறு தான் படம் சொதப்ப காரணம்” என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.