கலியுகத்துல அனுதினமும் சூரியன் சுட்டெரிக்கும் சென்னைமா பட்டினத்துல.. ஒரு சுப தினத்துல... புரியவில்லையா.... தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


ஆரண்யகாண்டம் படத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்   அந்தப் படத்தில் ட்ரெய்லரை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள். இன்று வரை அதைபோல் ஒரு படத்திற்கான ட்ரெய்லர் வெளிவந்ததில்லை. கிட்டதட்ட படத்தின்  மொத்த கதையும் இந்த ட்ரெய்லரில் கதைப்பாடலாக சொல்லப்பட்டிருக்கிறது.ஆரண்யகாண்டம் இன்று ரசிகர்களால் கொண்டாடப் படுகிறது.


தமிழில் நியோ நோயர் (neo noir) வகையறா என்று இந்தப் படத்தைக் குறிப்பிடுகிறார்கள். குமாரரராஜா ஒரு முறை சொன்னதுபோல ரசிகர்கள் தங்களுக்கு ஒரு படம் பிடிக்கவில்லை அல்லது புரியவில்லை என்றால் அந்தப் படத்தை தங்கள் அங்கீகரிக்க தவறவிட்டுவிட்டார்கள் என்றால் அவர்கள் அந்தப் படத்திற்கு கல்ட் ஸ்டேட்டஸ்  கொடுத்து அந்தப் படத்தை கொண்டாடி ஈடுசெய்துவிடுவார்கள்.


ஏன் நியோ நாயர் என்று கொண்டாடப்படுகிறது. நோயர் என்றால் கருப்பு. பிரான்சில் உருவான இயக்கம்  நோயர். திரைப்படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட காலத்தில் ஒரு புதிய அலை இயக்குநர்கள் படங்களில் இருளை முதன்மையாக பயன்படுத்தினார்கள். இந்த வரிசைப் படங்களின் கதைக்களம் அதீதமான குரோதம்,வன்முறை ,காமம் , முதலியவற்றை சித்தரித்தன.


நோயர் வகையத் தொடர்ந்து உருவானது தான் நியோ நோயர். அதீதமான வண்ணங்கள், மிகைபடுத்தப்பட்ட ஒளியமைப்பு, வித்தியாசமான கேமரா கோணங்கள் ஆகியவை நல்லவர் கெட்டவர் என்கிற கதாபாத்திரம் பேதமின்மை ஆகியவை இந்தப் வகைப்படங்களின் பொதுவான அம்சங்கள்.


ஆரண்யகாண்டம் திரைப்படம் இந்த வகைக்குள் வரும் திரைப்படம். ஒரு நாளில் நடக்கும் ஆறு மனிதர்களின் கதை.ராமாயணத்தில் வரும் ஆரண்யகாண்டம் காட்டில் விலங்குகளை மையப்படுத்தி நடக்கும் கதை. அதேபோல் படத்தின் கதாபாத்திரங்கள் சிங்கப்பெருமாள், கஜேந்திரன்,பசுபதி,காளையன் அனைவரும் விலங்குகளின் பெயர்களையே கொண்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு இடையில் நடக்கும் போரில் யார் அன்றைய நாளின் முடிவில் பிழைக்கப் போகிறார் என்பதே இந்தப் படத்தின் கதை.


படத்தின் அத்தனை கதாபாத்திரத்தையும் அத்தனை சிரத்தையுடன் வடிவமைத்திருப்பார் தியாகராஜா குமாரராஜா. ஆனாலும் குழந்தைகளின் மொழியில் விஷயங்களை விவரிப்பது குமாரராஜாவிற்கு அனாயாசமாக வரும் கலை.இந்தப் படத்தில் இருக்கும் கொடுக்காபுளி ஆகட்டும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் ராசுகுட்டி ஆகட்டும் இருவரும் மிகப்பெரிய அர்த்தம் கொண்ட வார்த்தைகளை மிக எளிய வார்த்தைகளில் சொல்லிவிடுவார்கள் .அதுவரை குழந்தைகள் என்றாலே க்யூட் என்கிற இமேஜை உடைத்து வாயில் பட்டாசு வெடிப்பது போல் பேசுபவன் கொடுக்காபுலி.


இறந்த ஒருவனைப் பார்த்து கஜேந்திரன் "நீ மட்டும் இப்ப உயிரோட இருந்த உன்ன கொன்னுடுவேன்”, காளையன் ஃபோனில் பேசிக்கொண்டே "சரியா ஒரு மணிக்கு ஓடாத மணிக்கூண்டுகிட்ட வந்திருங்க" ஆகிய வசனங்கள் டார்க் ஹியூமரை தொட்டுச்செல்லும் வசனங்கள். இப்படி படம் முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் விதமாக வெளியான ஆரண்ய காண்டம் ரிலீசான சமயத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.