ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றில் மோகன்லால்
ஜெய் பீம் , வேட்டையன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் த செ ஞானவேல் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். ஹோட்டல் சரவண பவன் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றை ' தோசா கிங்' என்கிற படமாக எடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார் ஞானவேல். இதில் பல்வேறு சவால்கள் இருந்ததால் இந்த படத்திற்கான வேலைகள் தள்ளிப்போய் கொண்டிருந்தன. தற்போது சரவண பவன் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் 7 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிச்சை ராஜகோபாலின் வாழ்க்கை வரலாறு
தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமத்தில் வெங்காய விவாசாயிக்கு மகனாக பிறந்தவர் பிச்சை ராஜகோபால். 1973 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து ஒரு சிறிய மளிகை கடையைத் தொடங்கினார். நெருப்பு சம்பந்தபட்ட ஒரு தொழிலை தொடங்கும்படி ஜோசியர் ஒருவர் வழங்கிய அறிவுரையின்படி 1981 ஆம் ஆண்டு சரவண பவன் என்கிற சைவ உணவகத்தைத் தொடங்கினார். குறைவான விலையில் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதை தனது கொள்கையை கடைசிவரை கடைபிடித்தார். மேலும் தனது உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் , மருத்துவ காப்பீடு , வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துகொடுத்து மக்களால் செல்லமாக 'அண்ணாச்சி ' என அழைக்கப்பட்டார். ஒரு சிறு ஹோட்டலில் தொடங்கி 2019 ஆம் ஆண்டுக்குள் 22 நாடுகளில் 111 கடைகளை உருவாக்கினார். இதன் மொத்த சொத்து மதிப்பு ரூ 3000 கோடி.
ஜீவஜோதி வழக்கு
ஒருபக்கம் வியக்கதகுந்த மனிதராக கருதப்படும் ராஜகோபாலின் வாழ்க்கைக்கு மற்றொரு இருண்ட பக்கமும் இருக்கிறது. ஜோதிடத்தின் மேல் தீவிர நம்பிக்கைக் கொண்டிருந்தவர் ராஜகோபால் தனது தொழில் ரீதியான எல்லா முடிவுகளையும் ஜோதிடத்தின் அடிப்படையில் எடுக்கக் கூடியவர். அதே ஜோதிடத்திற்கு கட்டுப்பட்டு தனது உதவி மேலாளரின் மகள் ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொண்டால் உலகத்தின் மிகப்பெரிய செல்வந்தராகிவிடலாம் என நம்பினார். ஏற்கனவே பிரின்ஸ் சாந்தகுமார் என்பவருடம் திருமணம் ஆனவர் என்றபோது தொடர்ச்சியாக ஜீவஜோதிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார். 2001 ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்ததற்காக ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். தண்டனையை குறைக்க ராஜகோலா மனுதாக்கல் செய்தபோது அவருக்கு ஆயுள் தண்டனையை தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். சிறை செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு ராஜகோபால் உயிரிழந்தார்.