விஜய் ஆண்டனி
சின்னத்திரையில் சீரியல்களில் தொடங்கி சுக்ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ள விஜய் ஆண்டனி, இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பிச்சைகாரன் 1, 2 பாகம் என வெற்றிகரமான படங்களையும் அளித்துள்ளார். இப்படியான நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று செப்டம்பர் 20 தற்கொலை செய்துகொண்ட தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இயக்குநர் சுசீந்திரன்
இப்படியான நிலையில் இயக்குநர் சுசிந்திரன் பகிர்ந்த தகவல் மேலும் அனைவருக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனியின் மகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சுசிந்திரன் “ எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. நான் இந்த வீட்டிற்கு பலமுறை வந்திருக்கிறேன். மீரா என்னிடம் எப்போதும் சிரித்த முகத்துடன் பேசுவார். என் நண்பர்களிடம் இந்த தகவல் உண்மைதானா? இல்லை போலியான செய்தியா? என்று கேட்டேன்.
இந்த தகவல் உண்மை என்று நான் ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு அரை மணி நேரம் ஆனது. விஜய் ஆண்டனிக்கு தனது குடும்பம் தான் உலகம். வேலை விட்டால் வீடு என்று இருப்பவர் அவர் இந்த அதிர்ச்சியை அவர் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை. கடவுள் அந்த குடும்பத்திற்கு ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும். அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
இதே வயதில் 12ம் வகுப்பு படிக்கும்போது தான் என் தங்கை இறந்தார். பெற்றோர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். 17, 18 வயது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களின் வாழ்க்கையில் அது மிகவும் முக்கியமான வயது. முடிவெடுக்க தெரியாத வயது அது….” என்று தன் பேச்சை மேலும் தொடர முடியாமல் நிறுத்தினார் சுசீந்திரன்.
பிரபலங்கள் இரங்கல்
திரைத்துறையில் அனைத்து நடிகர்கள், இசையமைப்பாளர், இயக்குநர்கள் மத்தியில் நல்ல நட்பு உறவுக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் வழியாகவும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஜி. வி பிரகாஷ், விஷால்:
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ”அன்பு சகோதரர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா இறைவனடி சேர்ந்தார் எனும் தாங்க முடியாத துயர செய்தி அறிந்து மன வேதனையுற்றேன். தங்கையின் ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் ”என்னுடைய நெருங்கிய நண்பரும், பள்ளி வகுப்பு தோழனுமான விஜய் ஆண்டனியின் மகளின் மறைவு செய்தில் மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ராஜா ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும் உங்களுடன் நான் எப்பொழுதும் இருப்பேன். தைரியமாக இருங்கள். வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. மகளை இழந்து வாடும் இரங்கல் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல், இந்த வேதனையில் வெளியே வர கடவுள் வலிமையை தர வேண்டும். உங்கள் மகளின் மறைவு செய்தி எனது மனதை வெறுமையாக்கியுள்ளது. “ என பதிவிட்டிருந்தார். மேலும் நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அனிருத் மேலும் பல திரையுலக பிரபலங்கள் நேரிலும் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.