இயக்குநர் சுந்தர் சி, அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை எடுக்க இரண்டு சிறுமிகள் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? வாங்க பார்க்கலாம்!


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி, நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்கு இடையே படங்களை இயக்கி வரும் அவர், தற்போது அரண்மனை படத்தின் 4ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் 2014ஆம் ஆண்டும், 2ஆம் பாகம் 2016 ஆம் ஆண்டும், 3 ஆம் பாகம் 2021ஆம் ஆண்டும் வெளியானது. அரண்மனை 4ஆம் பாகம் ஏப்ரல் 26ஆம் தேதி ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாகத்தில் சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா, தமன்னா, விடிவி கணேஷ், யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.  இதனிடையே அரண்மனை படத்தின் 4ஆம் பாகம் உருவாக இரண்டு சிறுமிகள் தான் காரணம் என இயக்குநர் சுந்தர்.சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் 


அதில், “நான் ஒரு வேலையாக மும்பைக்கு சென்றிருந்தேன். அப்போது விமானத்தில் என்னுடன் 13 அல்லது 14 வயதுடைய சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் பயணித்தார். அந்தப் பயணம் முழுவதும் அச்சிறுமி என்னிடம் “அரண்மனை படத்தின் அடுத்த பாகம் எப்போது எடுப்பீர்கள்?” என்ற கேள்வி தான் தொடர்ந்து எழுப்பினார். அதேபோல் நான் திரும்பி இரவு விமானத்தில் ஏற வந்தேன். கடைசியாக சென்ற பஸ்ஸில் என்னுடன் அதே மாதிரி சிறுமி ஒருவர் பெற்றோருடன் வந்திருந்தாள். அந்த பெற்றோர் என்னிடம் “உங்களுக்காக தான் காத்திருந்து இந்தப் பேருந்தில் வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.


என்னம்மா? என நான் கேட்டதும், அந்தச் சிறுமி, “நான் அரண்மனை படத்தில் மிகப்பெரிய ரசிகை. எப்போது அடுத்த பாகத்தை ஆரம்பிக்க போகிறீர்கள்?” எனக் கேட்டார். நான் அந்த சமயத்தில் எந்தப் படம் பண்ணுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். இந்த இரு சம்பவங்களும் எனக்கு ஏதோ அறிகுறி போல் தெரிந்தது. அப்போது தெளிவாக ஒரு முடிவு எடுத்தேன். அந்த சிறுமியிடம் “அரண்மனை 4 எடுக்க போகிறேன். நீ எல்லோரிடமும் உனக்காகத்தான் இந்த படம் எடுக்க போகிறேன் என்பதை சொல்” எனத் தெரிவித்தேன். அந்த சிறுமிகள் எங்கிருந்தாலும் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.