தலைநகரம் 2 படம் உருவாக, நான் நடித்த ‘இருட்டு’ படம் தான் காரணம் என இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி கூறியுள்ளார். 


தமிழ் சினிமாவின் பல வெற்றிப்படங்களை இயக்கிய சுந்தர்.சி கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை சுந்தர் சியிடம் உதவி இயக்குநராக இருந்த சுராஜ் இயக்கியிருந்தார். தலைநகரம் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இமான் இசையமைத்திருந்தார். படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக வடிவேலுவின் நாய் சேகர் காமெடி எவர்க்ரீன் காமெடிகளில் ஒன்றாக அமைந்தது. 


இதனிடையே 17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ‘முகவரி’, ’தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சுந்தர்.சி, “தலைநகரம் 2 படம் பண்ணலாமா என துரை கேட்டவுடன் படத்தின் தலைப்பு பற்றி தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டும் என சொன்னேன்.


தலைநகரம் படத்தின் எந்த தடையுமின்றி அனுமதி கொடுத்தார்கள். துரை இந்த படம் பற்றி கேட்டவுடன் வேறு யாராவது இருந்தால் எனக்கு சந்தேகம் வந்திருக்கும். ஆனால் நாங்கள் இருவரும் இருட்டு படத்தில் இணைந்திருக்கிறோம். அதனால் எந்த சந்தேகமும் எழவில்லை. இருட்டு படம் உருவானதே விடிவி கணேஷால் வந்தது தான். தினமும் அவர் என்னிடம் ஒரு படம் வேண்டும் என கேட்டுக் கொண்டே இருந்தார். 


நான் அவரை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என நினைத்து நல்ல இயக்குநர் வேண்டும் என சொன்னேன். விடிவி கணேஷ் தான் எனக்கு துரையை அறிமுகப்படுத்தினார். நாங்கள் இருவரும் பேசி பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஹாரர் படம் பண்ணலாம் என முடிவெடுத்தோம். ஆனால் இருட்டு படத்தின் கதை சூப்பராக இருந்தது. எனக்கு அந்த படம் ரொம்ப பிடித்திருந்தது. அந்த படத்தின் வெற்றி தான் தலைநகரம் 2 படம் பண்ணலாமா என கேட்டவுடன் ஓகே சொல்ல வைத்தது. 


இந்த படத்தில் அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. நான் நிறைய படம் இயக்கியிருக்கேன், நடிச்சிருக்கேன், தயாரிச்சிருக்கேன். ஷூட்டிங் முடிச்சி வீட்டுக்கு போனால் நன்றாக தூங்குவேன். ஆனால் இந்த படம் ஷூட்டிங் முடிச்சிட்டு போனா என் மனைவி குஷ்பூவிடம் கை, கால் எல்லாம் அமுக்கி விட சொல்வேன். அவ்வளவு பிரஷ்ஷர். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் துரை செதுக்குனது என்று சொல்லலாம்.