சுந்தர் சி
கவலைகளை எல்லாம் மறந்து கலகலப்பாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் சுந்தர் சி படங்களை செலக்ட் செய்யலாம். லைட் வெயிட்டான ஒரு கதை நிறைய காமெடி ரொம்ப யோசிக்க வைக்காமல் இயல்பாக செல்லும் கதை என பொழுதுபோக்கு அம்சங்கள் சுந்தர் சி படங்களின் பெரிய பலமாக இருக்கின்றன. சுந்தர் சி இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகள் முன் வந்த படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. கலகலப்பு , தீயா வேலை செய்யனும் குமார் , வின்னர் மாதிரி இன்னொரு சுந்தர் சி படம் வராதா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எப்போதும் இருந்து வந்தது.
அரண்மனை 4
அப்படியான ஒரு கம்பேக் படமாக அரண்மனை 4 படம் அமைந்தது. கதை ரீதியாக அதே முந்தைய பாகங்களின் கதை தான். காமெடியும் பெரியளவில் இல்லை. சுந்தர் சி இயக்கிய பெஸ்ட் என்று சொல்லிவிட முடியாத அளவு சுமாரான படம்தான் அரண்மனை. ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனவரி பொங்கலை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் , அயலான் , லால் சலாம் என அடுத்தடுத்த படங்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. மலையாள சினிமாக்களை பார்த்து காலம் தள்ளிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அரண்மனை படம் சிக்கியது. படம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை இளைஞர்கள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை திரையரங்குகளுக்கு படை எடுத்தார்கள்.
2024 ஆம் ஆண்டில் மற்ற படங்கள் திணறிய போது அந்த ஆண்டின் முதல் 100 கோடி படமாக அரண்மனை அமைந்தது. திரையரங்குகளுக்கு இந்த படம் ஓரளவு லாபமாக அமைந்தது. சுந்தர் சி யின் வெற்றி மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டும் தொடர்கிறது
மதகஜராஜா முதல் நாள் வசூல்
12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் போன பட மதகஜராஜா. இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. ஷங்கரின் கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான் , மெட்ராஸ்காரன் , என மொத்தம் பத்து படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருந்தன. இதில் கேம் சேஞ்சர் மற்றும் வணங்கான் ஆகிய இரு படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. பொங்கலில் ஒரு படம் வெற்றிப்படமாக அமைகிறது என்றால் அது ஒரு கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டம் இந்த ஆண்டு மிஸ் ஆகிடுமோ என்கிற பயம் ரசிகர்களுக்கு வந்திருக்குமோ என்னவோ. எல்லா கூட்டமும் சுந்தர் சி யின் மதகஜராஜா படம் பக்கம் திரும்பியுள்ளது.
சுந்தர் சி , சந்தானம் , விஜய் ஆண்டனி என 90 கிட்ஸ்களின் மொத்த நாஸ்டால்ஜியாவும் கிளம்பி படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. மதகஜராஜா திரைப்படம் இந்தியளவில் 1.29 கோடி வசூலிக்கும் என சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முதல் வெற்றிப்படமாக சுந்தர் சி யின் படம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சத்தமே இல்லாமல் கம்பேக் கொடுத்து வருகிறார் சுந்தர் சி .