அன்பே சிவம் படம் வெளியானபோது அந்தப் படத்தைப் யாரும் சரியாக அங்கீகரிக்கவில்லை என்று இயக்குநர் சுந்தர்.சி (Sundar C) தனது மனவருத்தத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சுந்தர்.சி


முறைமாமன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர் சி. தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், மேட்டுக்குடி, கிரி, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட கமர்ஷியலாக வெற்றிபெற்ற படங்களை இயக்கியுள்ளார்.


ரொமான்ஸ், ஆக்‌ஷன், நகைச்சுவை ஆகியவை சுந்தர் சி படங்களில் பொதுவாக காணப்படும் அம்சங்கள். ஆனால் இவற்றில் மாறுபட்ட திரைப்படம் என்றால் அது “அன்பே சிவம்”. சுந்தர்.சி இயக்கி இன்று பல ரசிகர்கள் பாராட்டி வரும் ஒரு படம், 2003ஆம் ஆண்டு அவர் இயக்கிய அன்பே சிவம். கமல்ஹாசன், மாதவன் இணைந்து நடித்த இந்தப் படம், அவரது இயக்குநர் வாழ்க்கையில் தனித்துவமான ஒரு படைப்பாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அனைவரும் பாராட்டும் இந்தப் படம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவரது பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


நீங்க எல்லாம் அப்போ எங்க இருந்தீங்க



தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் சுந்தர்.சியிடம் நீங்கள் அன்பே சிவம் மாதிரியான ஒரு படத்தை ஏன் மீண்டும் இயக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்.  “அன்பே சிவம் படத்தை இயக்கியதன் மூலம், எனக்கு கிடைத்ததைவிட, நான் இழந்ததுதான் அதிகம்.


அந்தப் படம் இயக்கிய பின் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலம் என்னுடைய வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்தேன். இன்று அந்தப் படத்தை நிறைய ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடுகிறார்கள். நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நிறைய நபர்கள் என்னைப் பார்த்து அன்பே சிவம் படத்தை பார்த்து பாராட்டுகிறார்கள்.


அப்படியான நேரத்தில் எனக்கு கோபம் தான் வருகிறது. நீங்கள் எல்லாம் அப்போ எங்க இருந்தீங்க. அந்த படம் திரையரங்கில் வெளியானபோது ஆதரவு கொடுத்திருந்தால் நான் தொடர்ந்து அந்த மாதிரியான படங்களை இயக்கியிருப்பேன். அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும், நல்லது போய் சேர கொஞ்ச நாள் ஆகும்னு. அதே போல் மக்களிடையில் தாமதாக போய் சேர்ந்தாலும் நான் இயக்கிய சிறந்த படம் என்று எனக்கான ஒரு தனி அடையாளமாக அந்தப் படம் என்றும் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.




மேலும் படிக்க : V.S.Raghavan: தனித்துவமான குரல், சிறந்த குணச்சிர நடிகர், 1500 படங்கள்! வி.எஸ்.ராகவன் நினைவலைகள்!  


Ayalaan OTT Release: ஓடிடிக்கு வரும் சிவகார்த்திகேயனின் “அயலான்”: எங்கே, எப்போது பார்க்கலாம்? முழுவிவரம்!