Sudha Kongara : சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று (Soorarai Pottru) படம் கடந்த வாரம் நடந்த 68-வது தேசிய திரைப்பட விருதுகளில் 5 விருதுகளை வென்று வாகை சூடியது.இப்படம் சிறந்த படத்திற்கான விருதினை பெற்றது அதுமட்டுமல்லாமல்,இப்படமானது சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பிண்னணி இசைக்கான விருதை ஜி.வி.பிரகாஷும், சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்கரா மற்றும் ஷாலினி ஆகிய அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தற்போது தனது ட்விட்டர் பக்கதில் இயக்குநர் சுதா கொங்கரா சூரரைப் போற்று படம் வெற்றி பெற்றதையடுத்து, தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் சுதா கொங்கரா எழுதியதாவது,
”இந்த படத்தின் பயணம், என் அப்பாவின் மரணத்தோடுதான் தொடங்கியது. என் அப்பாவின் கடைசி உருவம் எனக்கு இப்படித்தான் ஞாபகமிருக்கிறது. அவர் படுத்திருந்த படுக்கையிலிருந்து அருகில் வருமாறு என் கையசைத்து கூப்பிட்டார். அதையும் சூரரைப்போற்று படத்தில் காட்சியாக சேர்த்தேன். பட இயக்குநர்களாக நம் எல்லோருக்கும் நம் வாழ்வின் ஒரு பகுதி நம் படங்களில் சேர்க்கும் ஒரு பேராசை இருக்கத்தானே செய்யும்..?
அப்பா, என் வாழ்க்கையின் எல்லா அற்புத தருணங்களுக்கும் நன்றி. அந்த தருணங்களை சூரரைப்போற்றில் வைத்திருக்கிறேன். இந்த விருதுகளை வாங்கும்போது நீங்கள் இல்லை என்பதுதான் என் ஒரே துயரம்.என் குருவுக்கு நன்றி. மணி சார் கற்றுக்கொடுக்காமல் இருந்தால் நான் யார்? ஜீரோதான்.
கேப்டன் கோபிநாத்துக்கும், சூர்யாவுக்கும் நன்றி. என்னை நம்பியதற்காக கேப்டன் கோபிநாத்துக்கும், கோபிநாத்தாகவே வாழ்ந்த சூர்யாவுக்கும் நன்றி.தயாரிப்பாளர்களுக்கும் படத்துக்காக உழைத்தம் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. மகாகவி பாரதியாரின் வார்த்தைகளான சூரரைப்போற்று என்பதையே உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
என்னை தூணாக தாங்கிக்கொள்ளும் என் குடும்பத்துக்கு நன்றி. எனது நண்பர்கள் ஜிவி, பூர்ணிமா மற்றும் டாக்டர் விஜய் சங்கருக்கு நன்றி. இந்த பயணம் முழுவதும் என்னை விழாமல் பாத்துக்கொண்ட என் அரண் நீங்கள்தான். என் உதவி இயக்குநர்களுக்கு நன்றி. எனது நம்பிக்கைக்குரிய படை வீரர்கள் நீங்கள்.
ஊடகங்களுக்கு நன்றி. நான் சறுக்கியபோது என்னை விமர்சித்து, சரியானவற்றைச் செய்தபோது உற்சாகப்படுத்தி ஆதரவளித்த உங்களுக்கு நன்றி. நீங்கள் எப்போதுமே எனக்கு ஒளி.
ரசிகர்களுக்கு நன்றி. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படம் திரையரங்கில் வெளியானபோது உங்கள் ஆதரவால் அகமகிழ்கிறேன். நீங்கள் கடவுள்கள். இறுதியாக மற்ற பெண் இயக்குநர்களுக்கு என் ஆதரவும், போற்றுதலும். நீங்கள் இளம்பெண்களுக்கு இத்துரையில் ஊன்றுகோலாக மாறுகிறீர்கள். வழிகாட்டுகிறீர்கள். நன்றியுடன், சுதா கொங்கரா.”
இந்த ட்வீட்டின் கேப்ஷனில், மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள அன்பின் நபர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : Sudha Kongara SooraraiPottru : சூர்யாவோட கண்ணு பொய் சொல்லாது.. வார்த்தை பொய்யாகாது - நெகிழ்ந்த சுதா கொங்கரா