சுதா கொங்காரா
இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் சூரரை போற்று திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி என்னும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஷ்னு விஷால், ஸ்ரீகாந்த், ஷாம்னா கசிம், பூனம் பஜுவா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் துரோகி படம் வணிக ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் ரித்திகா சிங்கை வைத்து இறுதிச் சுற்று படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார் சுதா கொங்காரா. ஸ்போர்ட்ஸ் டிராமா என்கிற வகைமையில் இயக்கப்பட்ட இந்தப் படம் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு எடுக்கப் பட்டது. தமிழைத் தொடர்ந்து இப்படம் இந்தி மற்றும் தெலுங்குவில் ரீமேக் செய்தார்.
சூரரைப் போற்றுவின் பிரம்மாண்ட வெற்றி:
தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த பெண் இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் இயக்குநர் சுதா கொங்காரா ( அப்படி சொல்வது அவருக்கு பிடிக்காதும் கூட) கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது. இதனைத் தொடந்து பாவக் கதைகளில் ஒரு அத்தியாயமான தங்கம் என்கிற கதையை இயக்கினார் சுதா கொங்காரா. சூரரைப் போற்று திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சூர்யாவுடன் இணைந்துள்ளார் சுதா கொங்காரா.
புறநானூறு படத்தின் கதை
சூர்யாவின் 43 ஆவது படத்தை சுதா கொங்காரா இயக்கவிருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது . இப்படத்திற்கு புறநாநூறு என டைட்டில் அறிவிக்கப் பட்டது. துல்கர் சல்மான் ,விஜய் வர்மா , நஸ்ரியா நஸிம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு சார்பில் தகவல் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இந்த படம் கைவிடப் பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில் புறநாநூறு படத்தின் கதைப் பற்றி பேசியுள்ளார் சுதா கொங்காரா.
தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுதா கொங்காரா, புறநானூறு படம் இந்தி எதிர்ப்பை மையமாக கொண்ட கதை. இது ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு படம். என்னுடைய எல்லா படங்களும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான படங்கள் தான். என்னுடைய அடுத்த படம் தமிழில் தான். அது புறநானூறு படமாக இல்லை என்றாலும் வேறு ஒரு தமிழ் படம் தான். “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் அவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் புறநானூறு படம் இன்னும் சில காலம் தள்ளிப்போகலாம் என்றும் அதற்கு முன்பாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் உடன் சுதா கொங்காரா தனது அடுத்த படத்தை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது