2024- 25ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவுக்கு இன்றே கடைசி ஆகும்.


தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இதில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில், 64 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன. இதை அடுத்து மீதமுள்ள 36 சதவீத இடங்களை நிரப்ப, மீண்டும் விண்ணப்பப் பதிவு தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் தெரிவித்தார்.


இதையடுத்து மீண்டும் ஜூலை 3ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.    


விண்ணப்பிப்பது எப்படி?


மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணைய தளத்துக்குச் சென்று, விண்ணப்பப் பதிவு குறித்து அறிந்துகொள்ளலாம்.


முன்பதிவு செய்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்


முதல்முறையாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். அதில், விண்ணப்பதாரர் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பிளஸ் 1 தேர்ச்சி, தகுதித் தேர்வு உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு சரியான தகவல்களை உள்ளிட வேண்டும்.


விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் குறித்து முழுமையாக அறிய https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction.pdf?t=1684734156651 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


இணைய வசதி இல்லாத மாணவர்கள், அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் (Admission Facilitation Center (AFC)- 2024) மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


3 வகை தரவரிசைப் பட்டியல்


3 வகைகளில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தமிழ், ஆங்கிலம், பொது தரவரிசைப் பட்டியல் தனித்தனியாக வெளியிடப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலத் தரவரிசைப் பட்டியல் இலக்கியப் படிப்புகளுக்கும் பொது தரவரிசைப் பட்டியல் மற்ற அனைத்து படிப்புகளின் சேர்க்கைக்கும் பயன்படுத்தப்படும்.


விண்ணப்பித்து முடித்த பிறகு, மெயில் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பதிவிட்டு லாகின் செய்யலாம்.   


கூடுதல் தகவல்களுக்குhttps://www.tngasa.in/


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முழு பட்டியலைக் காண: https://static.tneaonline.org/docs/arts/college_list.pdf?t=1684479144557 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


கூடுதல் விவரங்களுக்கு: tngasa24@gmail.com


தொலைபேசி எண்கள்: 044 - 24343106, 044 - 24342911