Parasakthi SK Update: இலங்கையில் இருந்து சிவகார்த்திகேயன் திரும்பியதும், பராசக்தி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
பராசக்தி - சுதா கொங்கரா அப்டேட்
அமலாக்கத்துறை சோதனையால் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் முடங்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பராசக்தி திரைப்படம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், பராசக்தி படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங் - சுதா கொங்கரா
கேள்வி - பராசக்தி படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
சுதா கொங்கரா - பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் வரட்டும்னு வெயிட் பண்றோம். சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கின்றார். அதை முடித்துக்கொண்டு அவர் வந்தவுடன் பராசக்தி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை துவங்குவோம்
கேள்வி - ”பராசக்தி” இந்தி திணிப்பு பற்றிய படமா?
சுதா கொங்கரா - மீடியாவில் தான் அப்படி பேசுறாங்க, ஆனா நான் இதுவரை அப்படி சொன்னதே இல்லை, இது சகோதர்களின் கதை அவ்வளவு தான்
கேள்வி - படத்தின் ரிலீஸ் எப்போது?
சுதா கொங்கரா - படத்தின் ரிலீஸ் குறித்து எல்லாம் நான் முடிவெடுப்பதில் ஒன்றுமில்லை, தயாரிப்பாளர் தான் ரிலீஸ் பற்றி முடிவெடுக்கவேண்டும்
கேள்வி - விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதவுள்ளதா?
சுதா கொங்கரா - மீடியாக்களில் தான் இந்த விஷயத்தை பற்றி பெரிதாக பேசுகின்றனர். ஆனால் நாங்கள் இன்னும் அதிகாரப்பூரவமாக அறிவிக்கவே இல்லை.
எதிர்பார்ப்பில் பராசக்தி:
சுதா கொங்கரா இயக்கதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ஃபசில் ஜோசப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகி வருவதாக கூறப்படும் இந்த படத்தில், மாணவ சமுதாயத்தின் தலைவனாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற தலைப்பில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிக்கலில் பராசக்தி:
ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தான் தனது டான் பிக்சர்ஸ் சார்பில் பராசக்தி படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தான் அண்மையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. ஒரே நேரத்தில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இட்லி கடை, பராசக்தி மற்றும் சிம்புவின் 49வது படத்தை தயாரிப்பது எப்படி? வருமானத்திற்கான ஆதாரம் என்ன? என்ற நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனை நடைபெற்றது முதலே ஆகாஷ் பாஸ்கரன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால், பராசக்தி திரைப்படம் முடங்கும்? என்பன போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.