மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல மலையாள இயக்குநர் சித்திக் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2001 ஆம் ஆண்டு தமிழில் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தவர் சித்திக். . தொடர்ந்து விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா, பிரசன்னா நடித்த சாது மிரண்டா போன்ற படங்களை இயக்கினார். காமெடியால் தனது படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சித்திக், பின்னர் விஜய் நடித்த காவலன், அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட 5 படங்களை மட்டுமே தமிழில் இயக்கியுள்ளார். அதேசமயம் நடிப்பில் கலக்கும் சித்திக் தமிழில் வெளியான சுபாஷ், ஜனா, ரங்கூன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வைகை எக்ஸ்பிரஸ், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் படங்களில் நடித்து ரசிகர்களிடம் நடிகராகவும் பரீட்சையமானார்.
இப்படியான நிலையில் மாரடைப்பு காரணமாக சித்திக் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (ஆகஸ்ட் 7) மதியம் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜீலை மாதம் 7ஆம் தேதி முதல் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை கவலைப்பட வைத்தது. பலரும் சமூக வலைத்தளங்களில் சித்திக் மீண்டும் உடல் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இயக்குநரும், நடிகருமான சித்திக் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு தங்கள் நினைவுகளை இரங்கல்களாக தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள், பிரண்ட்ஸ் படத்தின் கான்ட்ராக்டர் நேசமணி கதாப்பாத்திரத்தை உருவாக்கி, நம்மை எபோதும் சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக் மரணத்தால் அவரது படக்காட்சிகளை பகிர்ந்து தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். மலையாள திரையுலகம் தொடங்கி தமிழ் திரையுலகினரும் இவரது மரணத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் இவரது இயக்கத்தில் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பாடி காட் படத்தினால் ஹிந்தி திரையுலகிலும் காலடி எடுத்துவைத்து வெற்றி பெற்ற தென் இந்திய திரைப்பட இயக்குநர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான பிக் பிரதர் என்ற படம் தான் இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான படம். அதன் பின்னர் வயது மூப்பு காரணமாக இவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.