இயக்குநர் ஷங்கர் திருச்சிற்றம்பலம் பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் அவரை ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 


தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் ஆடுகளம், படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். 






கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி  பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். படம் வசூலில் சாதனைப் படைத்த நிலையில் படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டி தள்ளினர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கர் திருச்சிற்றம்பலம் படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். 






அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சிற்றம்பலம் அழகான திரைப்படம். வலிமிகுந்த தருணங்களைத் தொடர்ந்து வரும் அன்பான தருணங்களில் ஒரு அழகு இருக்கிறது. நித்யா மேனனின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு இதயங்களை கவர்கிறது” என புகழ்ந்து தள்ளினார்.






இதனைக் கண்ட ரசிகர்கள் ஷங்கர் தற்போது இயக்கி வரும் ஆர்சி15 படம் குறித்த அப்டேட் தருமாறு கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். தெலுங்கில் ராம்சரண் படம் மூலம் இயக்குநராக ஷங்கர் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.