கொம்பன் படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் ‘விருமன்’. இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சமீபத்தில், இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கும் அதிதி ஷங்கருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், அதிதி ஷங்கர் நடிகர் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விருமன் படத்தில் கார்த்தியோடு இணைந்து ராஜ் கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா தனது 2D என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
விருமன் திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.