இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படத்தின் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


ராம்சரணுடன் ஷங்கர்


தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் ஷங்கர் கடைசியாக நடிகர் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடித்த 2.0 படத்தை இயக்கியிருந்தார்.ஆனால் நண்பன் படத்திற்கு பிறகு அவர் எதிர்பார்த்த வெற்றி “ஐ மற்றும் 2.0” படத்தில் கிடைக்காத நிலையில் மீண்டும் பிரமாண்ட வெற்றியை கொடுக்க வேண்டுமென்ற முனைப்பில் பட வேலைகளில் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் தமிழில் “இந்தியன்” படத்தின் 2 ஆம் பாகம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. 


அதேசமயம் தெலுங்கு பட உலகில் நேரடி இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராம்சரணின் 15வது படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் சுனில், எஸ்.ஜே.சூர்யா,அஞ்சலி, நவீன் சந்திரா, ஜெயராம் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.  தமன் இசையமைக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். “ஆர்.சி.15” என அழைக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.






கேம்சேஞ்சர்


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் நடிகர் ராம்சரணின் பிறந்தநாளான மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதன்படி இந்த படத்திற்கு “ கேம் சேஞ்சர்” என பெயரிடப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  


கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்ட்ரா, ராஜ முந்திரி, பஞ்சாப், நியூசிலாந்து ஆகிய இடங்களி நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் ராம்சரண் தொடர்ந்து 80 விநாடிகள் நடனமாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ராம்சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.