Indian 2 new replacement confirmed: மறைந்த நடிகருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட நடிகர் யார்... ஷங்கர் எடுத்த முடிவு என்ன?
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "இந்தியன் 2".
பிரமாண்ட செட்களில் நடைபெறும் படப்பிடிப்பு:
தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் வடிவமைப்பாளர் டி.முத்துராஜ் உருவாகியுள்ள பிரமாண்ட செட்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் வரும் வாரத்தில் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
விவேக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்:
இப்படத்தின் படப்பிடிப்பு சில அசம்பாவிதங்களால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது தான் தொடங்கியுள்ளது. 'இந்தியன் 2' படத்தில் நடித்த இரண்டு முக்கிய நடிகர்களான விவேக் மற்றும் நெடுமுடி வேணு இருவரும் காலமானதால் அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த படக்குழுவினர் ஏற்கனவே நடிகர் விவேக்கிற்குப் பதிலாக குரு சோமசுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் சிபிஐ காவலர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த நெடுமுடி வேணு கதாபாத்திரத்தில் நடிக்க பலர் பரிசீலிக்கப்பட்டனர்.
நெடுமுடி வேணுவிற்கு பதிலாக யார்?
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி கதாபாத்திரத்தில் நடித்த வேணுவிற்கு பதிலாக மலையாள குணச்சித்திர நடிகர் நந்து பொத்துவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. மறைந்த நடிகர் வேணுவிற்கும் நந்துவிற்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதால் இந்த தேர்வு தானாக நடந்தது என கூறுகிறார் இயக்குனர் ஷங்கர்.
மேலும் அனிருத் இசையமைப்பில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனோடு, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், மனோபாலா, சமுத்திரக்கனி, ஜெயப்ரகாஷ், டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.