தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எனக் கொண்டாடப்பட்டு வரும் இயக்குநர் ஷங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் மூலமும் ரசிகர்களை வியக்க வைத்தவர். 1993ம் ஆண்டு வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்த ஷங்கர் தொடர்ச்சியாக காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், நண்பன், எந்திரன் என ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.


 



தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தில் பிஸியாக ஈடுபட்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  


 



இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் மிகவும் கோலாகலமாக இன்று (ஏப்ரல் 15) காலை இனிதே நடைபெற்று முடிந்தது. மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 


 



மேலும் இந்த திருமண விழாவில் திரைப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், மணிரத்னம், சுஹாசினி, பாரதிராஜா, பி. வாசு, கே.எஸ். ரவிக்குமார், ஹரி, விஷால், அர்ஜூன், கீர்த்தி சுரேஷ், ஜீவா, ஏ.எம். ரத்னம், தில் ராஜு, ஐசரி கணேஷ், ஹாரிஸ் ஜெயராஜ், ஆர்.பி. சௌத்ரி, ரவி.கே.சந்திரன், ஒய்.ஜி. மகேந்திரன், சமுத்திரக்கனி, விஜயகுமார், பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர்.


 



இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண விழாவுக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் அட்லீ, இயக்குநர் வசந்த பாலன், நடிகர் பரத் மேலாளர் தங்கதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர். திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகின்றன. 


 



இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் ரோஹித் என்பவருக்கும் ஏற்கெனவே திருமணமான நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். 'விருமன்' படத்தில் நடிகர் கார்த்தியின் ஜோடியாக அறிமுகமாக அதிதி சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்து இருந்தார். மேலும் ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.