நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமையில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். முதலாவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு பேசுகையில், "இந்திய திருநாடு மிக மோசமான நிலையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். சமூகம் இந்திய ஆளுமை ஆகியவை பதற்றம் அடைந்துள்ளது.


பொருளாதாரம் சீர்கெட்டு நாட்டில் ஜாதி, மதம் ஆகியவற்றால் பிரிவினை ஏற்படுத்தும் ஆட்சி நம்மை பிடித்து இருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் மூலம் எப்படி வெள்ளையர்களை விரட்டி அடித்தோமோ அது போன்று இந்த கொள்ளையர்களின் கூட்டத்தை விரட்டியடித்து இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்தியா கூட்டணி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது. பாஜகவிற்கு ஏன் வாக்களிக்க கூடாது என்றால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எதும் இதுவரை நிறைவேற்றவில்லை. கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள்,  வறுமையை ஒழிப்போம் என்றார்கள்,  ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்றார்கள். இதையெல்லாம் நம்பித்தான் தமிழக மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் விவசாயம் படுகுழியில்  தள்ளப்பட்டுள்ளது. டெல்லி போராட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் சாகடிக்கப்பட்டுள்ளனர்.


காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு இருந்தது. அதுபோன்று கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.  ஆனால் மோடி அரசு சிறுபான்மை மக்களை பற்றி கவலைப்படாது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் வரலாற்றை  மறைத்து வருகிறது. மோடி ஆட்சியில் இந்தியாவில் நான்கு பணக்காரர்கள் மட்டுமே பயன் அடைந்துள்ளனர்.  இதுவே அவர்கள் ஆட்சியின் சாதனையாகும். ஆனால் தமிழகத்தில் இரண்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மோடிக்கு சிம்ம சொப்பனமாக ராகுல் காந்தியும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் உள்ளனர்.  இந்திய அளவில் ஆட்சி மாற்றம் என்பது இன்று முக்கியமானது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.