நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குநர் செல்வராகவன் புகழ்ந்து தள்ளியுள்ளார். 


தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் ஆடுகளம், படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 4வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். 






கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று முன்தினம் முதலே தியேட்டர்கள் திருவிழாகோலம் பூண்ட நிலையில் நேற்று படம் பார்த்த ரசிகர்கள் பலரும் திருச்சிற்றம்பலம் படத்தில்  படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாகவும், நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி  பார்த்த அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறினர். குறிப்பாக தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படி ஒரு தோழி நமக்கில்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்துள்ளது. 






இந்நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகர் தனுஷின் அண்ணனும்,  இயக்குநருமான செல்வராகவன் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், திருச்சிற்றம்பலம் படம் பார்த்தேன்! என்ன ஒரு அழகான படம். இப்படி ஒரு ஃபீல் குட் படம் பார்த்து கொஞ்ச நாளாகிவிட்டது. மேலும் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோரது நடிப்பு தன்னை கவர்ந்ததாகவும், அனிருத் கண்கவர் இசையால் அசத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் அழகான தருணங்களை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷை பாராட்டியுள்ள அவர் அதேபோல் இந்த அழகான இதயத்தை வருடும் பொழுதுபோக்கு படத்தை கொடுத்ததற்காக மித்ரன் ஆர். ஜவஹரை நினைத்து பெருமைப்படுகிறேன் என செல்வராகவன் தெரிவித்துள்ளார். செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்த மித்ரன், அவர் தெலுங்கில் இயக்கிய ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே படத்தை தமிழில் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.