தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் 5 ஜி சேவையை ஜியோ அறிமுகப்படுத்துகிறது. அதன்படி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ ட்ரூ 5 ஜி சேவையை இன்று வெளியிடுகிறது. 


இந்த அதிவேக ஜியோ 5ஜி சேவை மூலம் வாடிக்கையாளர்கள் 1 ஜிபிபிஎஸ் ப்ளஸ் வேகத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவை பெறுவார்கள் என ஜியோ தகவல் தெரிவித்துள்ளது. 5G-இயக்கப்பட்ட செல்போன்களில் மட்டுமே நீங்கள் 5G வேகத்தை அனுபவிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். "ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த கவரேஜ் மற்றும் பயனர் அனுபவத்தை வழங்க, ஒரு நகரத்தின் நெட்வொர்க் கவரேஜ் கணிசமாக நிறைவடையும் வரை, வாடிக்கையாளர்கள் இந்த பீட்டா சோதனையை தொடர்ந்து பெறுவார்கள்" என்று ஜியோ தெரிவித்துள்ளது.


700MHz, 3,500MHz மற்றும் 26GHz ஆகிய மூன்று பேண்டுகளில் 5Gக்கான மிகப்பெரிய வயர்லெஸ் ஸ்பெக்ட்ரத்தை ஜியோ கொண்டுள்ளது. இது கவரேஜ் அடிப்படையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட கூடுதல் நன்மையை ஜியோவுக்கு வழங்கும். 


அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நாட்டில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வதாக அறிவித்ததையடுத்து, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அடுத்த தலைமுறை நெட்வொர்க் அனுபவத்திற்கான தங்கள் வெளியீட்டுத் திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளன. ஜியோ இப்போது அதன் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக்கியுள்ள நிலையில், வோடபோன் ஐடியா (Vi) மட்டுமே அதன் 5G வெளியீட்டுத் திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை.






இன்று முதல் 5ஜி சேவை: 


மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவை தொடங்கவுள்ளதாவும், மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளனர். 


மேலும், 5ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும்,  ஏனெனில் இந்த சேவை தானாகவே Jio True 5G க்கு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. 


இதுகுறித்து, ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி வெளியிட்ட அறிக்கையில்,”டிஜிட்டல் இந்தியாவின் முழுத் திறனையும் உணர்ந்து கொள்வதற்காக, இந்தியா முழுவதும் 5ஜியை துரிதப்படுத்த வேண்டும் என்று நமது பிரதமர் நரேந்திர மோடி ஒரு தெளிவாக கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக எங்கள் ஜியோ நிறுவனம் அதிவேக 5ஜி ரோல்-அவுட் திட்டத்தை தயாரித்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.


5ஜி சேவை குறித்து முகேஷ் அம்பானி தெரிவிக்கையில், “இந்த 5ஜி மூலம் திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பல துறைகளை மாற்றியமைக்கும் தேசத்தின் முதல் தளங்களையும் தீர்வுகளையும் ஜியோ உருவாக்கும், ஒவ்வொரு இந்தியனுக்கும் சிறந்த வாழ்க்கையை வழங்கும். 


இந்த சேவை இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு வீடு மற்றும் ஒவ்வொரு வணிகத்திற்கும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தி, வருவாய் மற்றும் வாழ்க்கைத் தரத்தை வியத்தகு அளவில் அதிகரிக்க முடியும். நமது ஒட்டுமொத்த பொருளாதாரம், அதன் மூலம் நம் நாட்டில் வளமான மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குகிறது” என்றார்.