சேலத்தில் பாரதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்து கொண்டார். விழாவில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு சமூக சேவைக்கான "மாமனிதன்" விருது வழங்கப்பட்டது. அதன்பின் மேடையில் உரையாற்றிய இயக்குனர் சீனு ராமசாமி, சேலத்திற்கும், திரை உலகிற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. சேலம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது மாடன் தியேட்டர்ஸ் தான், திரை உலகிற்கு பல சம்பவங்களை அறிமுகம் செய்து வைத்தது சேலம். இங்கிருந்து சென்றவர்கள் தான் பிற்காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தனர். தொடர்ந்து பேசியவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக சென்னையில் தங்குவதற்கு சரியான இடமில்லாத நிலை ஏற்பட்டது என அவர் கடந்து வந்த நினைவுகளை அங்கிருந்தவர்களுடன் பகிர்ந்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீனு ராமசாமி, இளம் இயக்குனர்களை எனது சமகால படைப்பாளிகளாக தான் பார்க்கிறேன், அவர்கள் மிகவும் பரபரப்பான ஆக்சன் படங்கள் மற்றும் நுண்ணுணர்வான படங்களையும் இந்த வயதில் துணிந்து எடுப்பதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு முன்பாக திரையுலகுக்கு வந்தாலும் சமகாலத்தில் பயணிப்பவர்கள் என்று முறையில் அவர்களுடன் சேர்ந்து நல்ல பாதையில் பயணிக்க விரும்புவதாக கூறினார்.
விக்ரம் திரைப்படம் வெளியான போது அதிக விளம்பரம் இல்லாமல் மாமனிதன் திரைப்படம் வெளியானது. 40% பார்வையாளர்கள் மட்டுமே பார்த்த மாமனிதன் ஆஹா ஓடிடி தளத்தில் தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. உலக நாடுகளில் மாமனிதன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் முதல் தொடக்கம் தான் டோக்கியோ நகரில் சிறந்த ஆசியா படம் என்பது மாமனிதன் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மாமனிதன் திரைக்கதையை கேட்டு விட்டு நடிக்கிறேன் என்று கூறியதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது.
அடுத்து இடிமுழக்கம் என்னும் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகளை ஈடுபட்டு வருகிறோம். அதன்பின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.
நீட் தேர்வை கண்டு மாணவ மாணவிகள் பயப்படக்கூடாது. டாக்டர் இல்லை என்றால் மருத்துவத்துறையில் வேறு படிப்புகள் உள்ளன அதனை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்கலாம். தவிர்க்க வேண்டும் தற்கொலை எண்ணத்தை அறவே தவிர்க்க வேண்டும். தன்னை வளர்த்த பெற்றோர்களை நிரந்தர சோகத்தினை மாணவர்கள் தள்ளக்கூடாது. கனவு ஈடேறாத போது மாணவர்கள் அது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதற்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது தற்கொலை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.
எனது ஒவ்வொரு படத்திலும் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்ச்சி இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.