இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்று காலை மன்னிப்பு கேட்டது தொடர்பாக ’போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது’ என இயக்குநர் சசிகுமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

’பருத்தி வீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை கடந்த சில நாட்களாக பூதகரமாக வெடித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுக்கொண்டார் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்காரா, பொன்வண்ணன், கவிஞர் சினேகன், இயக்குநர் கரு.பழனியப்பன், ’இயக்குநர் சிகரம்’ பாரதிராஜா என பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். 

Continues below advertisement

தொடர்ந்து இந்த விவகாரம் வலுபெறும் நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “ பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!” என தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், இதுதொடர்பாக இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ”போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?

'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்...' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்' என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்?

இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?  சசிகுமார்!” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டு:

’பருத்தி வீரன்’ திரைப்படம் ரிலீசாகி 16 ஆண்டுகள் கடந்த பின்பும், அதன் மீதான சர்ச்சை இன்று பூதகரமாக வெடித்துள்ளது. கார்த்தி முதன் முதலில் கதாநாயகனாக நடித்த பருத்தி வீரன் படத்தை இயக்குநர் அமீர் இயக்கி இருந்தார். படம் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி வரை கடன் ஏற்பட்டதாக அமீர் கூறியிருந்தார். அமீரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, பருத்திவீரனின் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.2.76 கோடியில் பட்ஜெட் என சொல்லி விட்டு ரூ.4 கோடி வரை அமீர் செலவு செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார்.