கண்மணி அன்போடு காதலன் பாட்டு உருவான விதத்தை குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எதனுள் சென்றாலும் குணா படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் தான் ரீல்ஸ் வீடியோவாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களின் காதல் கீதம் என்றாலும் தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் (Manjummel Boys) படத்தால் இன்றைய தலைமுறையினருக்கும் அப்பாடல் சென்றடைந்துள்ளது.
சிதம்பரம் இயக்கியுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கூட்டம் போல இளைஞர்கள் இப்படத்தை காண படையெடுத்து வருகின்றனர். இப்படத்தில் சௌபின் ஷாஹிர் , ஸ்ரீநாத் பாசி , பாலு வர்கீஸ் , கணபதி எஸ். பொதுவால் , லால் ஜூனியர் , தீபக் பரம்போல் , அபிராம் ராதாகிருஷ்ணன் , அருண் குரியன் , காலித் ரஹ்மான் , சந்து சலீம்குமார், மற்றும் விஷ்ணு ரெகு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் குணா படம் மீண்டும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் உருவான விதத்தை அப்படத்தின் இயக்குநர் சந்தான பாரதி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதில், “கண்மணி அன்போடு காதலன் மாதிரியான பாட்டு முன்னரே வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலுக்கு அமைந்திருக்கும். அதை விட இந்த பாடல் மிகச்சிறப்பாக வந்தது என சொல்லலாம். கதைப்படி மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் காதலிக்காக லெட்டர் எழுத வேண்டும். இவருக்கு எழுத தெரியாத நிலையில், காதலியிடம் நீயே எழுதி படிச்சிக்க என சொல்லும் படி காட்சி இருந்தது.
இளையராஜாவிடம் இந்த காட்சிக்கான சிச்சுவேஷன் சொன்னோம். எந்த மாதிரி வேணும் என கேட்டார். அப்போது யாரோ, ‘அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்’ பாடல் மாதிரி, ஆனால் வேற மாதிரி இருக்க வேண்டும் என சொன்னோம். உடனே ராஜா ட்யூன் போட, அங்கே இருந்த கவிஞர் வாலி உடனடியாக வரிகளை எழுதிக் கொடுத்தார். பாட்டில் வரும் வசனத்தை கமல் முன்னரே எழுதிய நிலையில் வரிகளை மட்டும் மட்டும் வாலி எழுதினார். கமல்தான் பாட வேண்டும் என்பது முன்னரே முடிவாகி விட்டது. மேலும் இந்த படத்துக்கான மொத்த இசையையும் இளையராஜா 2 மணி நேரத்தில் முடித்து விட்டார்” என சந்தான பாரதி கூறியிருப்பார்.