தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற எண்ணற்ற பாடல்களின் வரிகள் மூலம் ரசிகர்களின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக சென்ற படலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் சினேகன். எழுத்தின் மீதும் சினிமா மீதும் இருந்த தீராத காதலால் விவசாய குடும்பத்தை சேர்ந்த சினேகன் சென்னைக்கு வந்து பல போராட்டங்களுக்கு பிறகு கவிஞர் வைரமுத்திவிடன் உதவியாளராக பணியாற்றி அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை பெற்று இன்று வரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு தன்னுடைய வரிகளால் அழகு சேர்த்துள்ளார். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்,தோழா தோழா, ஞாபகம் வருதே, ஆராரிராரோ, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், அறியாத வயசு, மன்மதனே உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் அவரின் உணர்வுபூர்வமான வரிகளுக்கு உதாரணம். 


 




ஒரு பாடலாசிரியராக வரிகளால் கவர்ந்த சினேகன், 'யோகி' படத்தின் மூலம் நடிகராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார். அதை தொடர்ந்து  ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்  சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அங்கு வேறு ஒரு பரிணாமத்தை வெளிப்படுத்தினார். தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியில் இணைந்துள்ளார். 


 


கவிஞர் சினேகன் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பாடலாசிரியராக என்ட்ரி கொடுத்துள்ளார். 


'வணக்கம் சென்னை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி அதை தெடர்ந்து காளி படத்தை இயக்கினார். இடையில் வெப் தொடர் ஒன்றை இயக்கிய கிருத்திகா உதயநிதி தற்போது ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, ஜான் கொக்கைன் உள்ளிட்டோரை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ரொமான்டிக் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விட்டது என்றும் மே மாதத்தில் வெளியாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 







ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல் ஒன்று நேற்று  பதிவாகியுள்ளது. இது குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கவிஞர் சினேகன். "இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஸ்ருதி ஹாசன் குரலில் "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படத்திற்காக நான் எழுதிய பாடல் பதிவானது" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 


மீண்டும் சினேகன் பாடல் வரிகளை கேட்க போகும் சந்தோஷத்தில் அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். 




மேலும் படிக்க: Manjummel Boys: குணா குகையில் இருந்த சமாதி.. மிரண்டு போன கமல், சந்தானபாரதி!