தமிழ் சினிமா இப்போது நல்ல திசையில் சென்று கொண்டிருப்பதாக இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 


1981 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அரசியல், சமூக சிந்தனை, சட்டம் சார்ந்த படங்களை எடுத்த சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து 19 படங்களை இயக்கியுள்ளார். நடிகர் ரஜினியை வைத்து நான் சிகப்பு மனிதன் படத்தையும் எடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். 


அவ்வப்போது படங்களை இயக்கி வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், நயைப்புடை, கொடி, டிராஃபிக் ராமசாமி, ஆருத்ரா, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் தன் திறமையை நிரூபித்துள்ளார். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை படம் வெளியாகி பாராட்டைப் பெற்றது.


ராமேஸ்வரம் சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர்


இதனிடையே ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் அவர் நேற்று வழிபாடு நடத்தினார். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின் குடும்ப நலன் வேண்டி கும்பம் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பின் சுவாமி தரிசனம் செய்தார். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், இறைவனுக்கு நன்றி சொல்லவே கோயிலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் பிளாட்பாரத்தில் இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது இறைவன் தான். எங்கெல்லாம் சிவன் கோயில் உள்ளதோ, அங்கெல்லாம் சென்று தரிசனம் செய்வது மனநிறைவை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், “உழைத்தவர் எல்லாம் உயர்ந்ததில்லை. அந்த வகையில் என்னை உயற்றியது சிவன் தான் என குறிப்பிட்டார். மேலும் சினிமா தான் எங்களை வாழவைக்கிறது. எனது மகன் விஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் கடும் உழைப்பு, தன்னம்பிக்கை மட்டுமல்ல, இறைவன் அனுக்கிரக, எங்கள் பிரார்த்தனையும் தான்” எனவும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். 


மேலும் விஜய்யின் குடும்பத்திற்காகவும், அவர் மீது அன்பு வைத்துள்ள கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி சொல்வதே என ஒவ்வொரு பிராத்தனையும் அம்சமாக உள்ளது என அவர் கூறியுள்ளார். அதேசமயம் தமிழ் சினிமா தற்போது நல்ல திசையை நோக்கி ஆரோக்கியமாக சென்று கொண்டிருக்கிறது என எஸ்.ஏ.சந்திரசேகர்  தெரிவித்துள்ளார்.