புதுச்சேரி: சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்பகரணி விழா நடைபெறுவதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி- திருக்காஞ்சி இடையே ஆன்மிக ஹெலிகாப்டர் சேவைக்கு ஏற்பாடு நடக்கிறது. வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சியில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான காசிக்கு நிகரான கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சங்கராபரணி ஆற்றில் புஷ்பகரணி விழா வருகிற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் சங்கராபரணி ஆற்றில் ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது.
புஷ்பகரணி திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 80 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் புதுவையில் இருந்து திருக்காஞ்சிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர வசதியாக ஆன்மிக ஹெலிகாப்டர் சேவை தொடங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக திருக்காஞ்சியில் கோவிலுக்கு அருகே ஹெலிபேட் மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதே போல் உப்பளம் துறைமுக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் மைதானமும் சீரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
உப்பளம் துறைமுகத்தில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் திருக்காஞ்சி செல்ல முடியும். பின்னர் அங்கு கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் புதுச்சேரிக்கு திரும்ப முடியும். இதற்காக குறைந்த கட்டணத்தில் ஆன்மிக ஹெலிகாப்டர் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சில தனியார் ஹெலிகாப்டர் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை சட்டபேரவையில் உள்ள அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலகத்தில் அவரது தலைமையில் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்காஞ்சி கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஹெலிகாப்டர் சேவையை எப்போது இருந்து தொடங்குவது, கட்டணம் நிர்ணயிப்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. மேலும், புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, வேலூர், மதுரை, சேலம், கோவை, திருச்சி, துத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்துவிமான நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே. முருகப்பெருமாள் கூறியதாவது:
முதல்கட்டமாக 19 இருக்கைகள் கொண்ட குறைந்த தொலைவு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கோவை என இரண்டு விமான நிலையங்களுடன் இதர நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக செக் குடியரசிடமிருந்து இதுபோன்ற 5 சிறிய விமானங்களை முன்பதிவு செய்துள்ளோம். அவை விரைவில் தமிழகம் வரவுள்ளன. இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு மூன்று முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம். வரும் தீபாவளி பண்டிகையின் போது இந்த சிறியரக விமானங்களை இயக்கும் திட்டம் தொடங்கும். இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்