மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது என பட விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மலையாள திரையுலகை புகழும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.


 அவர் தனது பேச்சின் போது, “என் சுவாசமே என்கிற பட டைட்டிலேயே அற்புதமாக காதல் இருக்கிறது. சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வு இல்லை, காதல் இல்லை. இப்படி எதுவுமே இல்லை. உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. அதனை மையமா வச்சி தான் இப்படத்தை எடுத்துள்ளார்கள். என் சுவாசமே படத்தில் ஒரே மலையாள கரையோரத்தில் நின்ற மாதிரி வாசனை இருக்கிறது. அந்த அளவுக்கு மலையாள பிரபலங்கள் இருக்கின்றனர்.  தமிழர்களுக்கு எப்பவும் மலையாளிகளை பிடிக்கும். ஆனால் மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. அதுதான் உண்மை. 


அதைப்பற்றி பேசினால் சர்ச்சையாகும். அதேசமயம் மலையாளிகள்  தொழிலில் 100% நியாயமாக உழைப்பார்கள். இன்னைக்கும் கூட நான் பெருமை மற்றும் பொறாமைப்படக்கூடிய விஷயம் அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான். அதில் ஒரு எள்ளளவு நம்ம கிட்ட (தமிழ் சினிமா) இருந்தா நல்லா இருக்கும். அம்மா என்ற சங்கத்தை வைத்துக் கொண்டு எந்த பிரச்சினையிலும் நியாயம் கிடைக்கச் செய்வார்கள். அதையெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 


ஒரு கதையை எடுத்தால் கதைக்குள்ளேயே இருப்பார்கள். நாம கதையை விட்டு வெளியே செல்வோம். கடைசி வரை கதைக்குள்ளே வர மாட்டோம். கதைக்கு வரமால் இடைவேளை வந்துவிட்டதே, இனிமேலாது வருமா என நினைக்க வைத்து விடுவார்கள். கடைசி ஒரு வரியில் கருத்து சொல்லியிருப்பார்கள். ஆனால் மலையாள சினிமா ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சரியாக கொடுத்து அதை பேசுபொருளாகவே அல்லது கருத்து பொருளாகவோ, சமுதாயத்தின் மையப் பொருளாகவோ தான் மலையாள திரையுலகினர் இருக்கிறார்கள். அந்த மாதிரி தான் மலையாளியான இந்த படத்தின் இயக்குநரும் இருப்பார் என நம்புகிறேன்’ என ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார். 


இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், எஜமான், ராஜகுமாரன், பொன்னுமணி, நந்தவன தேரு, கற்க கசடற உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: Vijay TVK: ஜெயலலிதாவையே மிஞ்சும் விஜய்! பக்கா ப்ளான் ரெடி! தளபதிக்காக தயாரான த.வெ.க நிர்வாகிகள்!