பட விழா ஒன்றில் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பெண்களின் ஆடை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
சின்ன கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், எஜமான், ராஜகுமாரன், பொன்னுமணி, நந்தவன தேரு, கற்க கசடற உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சிறந்த பாடலாசிரியராகவும் திறம்பட சினிமாவில் பயணித்துள்ளார். இதனிடையே இவர் நேற்று சென்னையில் நடைபெற்ற “என் சுவாசமே” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதே நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், படத்தில் இருந்த பெரும்பாலான நபர்கள் மலையாள மொழியை அடிப்படியாக கொண்டவர்கள் என்பதால் அதுதொடர்பாக பல கருத்துகளை தெரிவித்தார்.
அதன்படி, “மலையாளிகள் தொழிலில் 100% நியாயமாக உழைப்பார்கள்.அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான் நான் பெருமை மற்றும் பொறாமைப்படக்கூடிய விஷயமாக உள்ளது. தமிழர்களுக்கு எப்பவும் மலையாளிகளை பிடிக்கும். ஆனால் மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. மலையாள சினிமா ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சரியாக கொடுத்து அதை பேசுபொருளாகவே அல்லது கருத்து பொருளாகவோ மாற்றி விடுவார்கள்” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த படத்தை இன்னும் பார்க்கலை. இனிமேல் உட்கார்ந்து பார்த்து விட்டு தான் செல்வேன் என நினைக்கிறேன். கவிஞர் கவிதாயினி சொல்லும்போது, ‘இந்த படத்தில் பெண்களை ஆடை வழியாக கவர்ச்சியாக காட்டுவது அதிகமாக இருக்கிறது. பெண்ணியத்தை நேசிக்கிறவர்கள் அதனை சற்று குறையுங்கள்’ என சொன்னார். நாங்கள் காட்டுவதை விட பெண்களே அதிகம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.
நீங்க சமூக வலைத்தளங்களை எடுத்தால் நமக்கே போனை ஆஃப் பண்ண மனசு வரமாட்டிக்குது. பெண்களே உங்கள் உடலை இப்படி ஏன் ஆபாசமாக காட்டுகிறீர்கள் என்று நீங்கள் தான் கேட்க வேண்டும். அதேசமயம் படத்துக்காக வியாபாரத்துக்கும், ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக சில காட்சிகளே எடுப்பார்கள். ஆனால் முழுவதும் தெரிய வேண்டும் என்பதற்காக தானே தனியா எடுத்து போட்டு கொண்டிருக்கிறார்கள்.
யாரை யார் காப்பாற்ற வேண்டும் என தெரியவில்லை. எப்படி உடல் தெரியும்படி ஆடை உடுத்த வேண்டும் என பெண்களே ஆராய்ச்சி பண்ணுவார்கள் போலும். பெண்கள் அப்படி நடிக்கவில்லை என்றால் ஆண் ஏன் அப்படி எடுக்கப்போகிறான். கேரளாவில் இருந்து தான் முதலில் பிட் படம் வாங்கி கொண்டு வந்து தான் இங்கு ஓட்டுவார்கள். அதிலும் மலையாள திரையுலகினர் கில்லாடிகள். அவர்கள் ஆரம்பித்து விட்டது தான்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: RV Udhayakumar: மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்காது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேச்சால் சர்ச்சை