துருவ் விக்ரம்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் துருவ்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்து அசத்தினார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிடத்தகுந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் துருவ் விக்ரம்.
மாரி செல்வராஜ் கூட்டணி
இதனிடையே, இயக்குநர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்திற்கு அடுத்ததாக துருவ் விக்ரமுடன் இணைய இருந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பா ரஞ்சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தப் படம் தாமதமாகியது என்று முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்தப் படம் தாமதாகியதற்கு காரணம், உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படத்தை மாரி செல்வராஜ் இயக்க வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டுக்கொண்டதனால் தான் என்று, மாமன்னன் படத்திற்கு பின் தெரிய வந்தது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்கிற படத்தையும் எடுத்து முடித்துள்ளார் மாரி. இதனைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்து அடுத்தப் படத்தில் பணியாற்றி வருகிறார் மாரி செல்வராஜ்.
துருவ் விக்ரமுனுடனான இந்தப் படம் கபடியை மையப்படுத்தியதாக இருக்கும் என்று முன்பே கூறப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 1990 காலக்கட்டத்தில் தூத்துக்குடியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயரித்து வருகிறது.
வாழ்த்திய ரஞ்சித்
இந்நிலையில் இன்று நடிகர் துருவ் விக்ரம் தன் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். தனது ட்விட்டர் பக்கத்தில் “பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களது கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள். உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார் ரஞ்சித்.
இதனுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் கபடி டீ ஷர்ட் அணிந்துள்ளார்கள். இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.