மாநாடு படத்தை முடித்த கையோடு தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. படத்தை இயக்குநர் ராம் இயக்க போவதாகவும், கதாநாயகனாக நிவின் பாலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்றும் படம் தனுஷ்கோடி பகுதிகளில் தொடங்கியுள்ளது. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “ நண்பர்களுக்கு வணக்கம்.#மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து, மக்களின் இயக்குநர் ராம் இயக்கத்தில் மலையாளம், தமிழ் இரண்டிலும் இளையோர்களின் மனதைக் கொள்ளையடித்த நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் உங்கள் அன்பினாலும் ஆசிகளாலும் தொடங்கியுள்ளோம். விஹவுஸ் புரொடக்ஷன்ஸின் ஏழாவது தயாரிப்பாக உருவாகிறது. யுவனின் இசை. ஏகாம்பரம் ஒளிப்பதிவு. உமேஷ் ஜே குமார் கலை. மக்கள் தொடர்பு A. ஜான்.பரபரப்பான படப்பிடிப்பில் படம் நகரும். இப்படத்தையும் உங்கள் மனதுக்கு நெருக்கமான படமாக விரைவில் கொண்டு வருவோம். உடன் நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்” என படத்தின் அனைத்து விவரங்களையும் வெளியிட்டிருந்தார். 



 


நடிப்பில் அசத்தும் நிவின் பாலி, இசையில் மிரட்டும் யுவன் கூடுதல் ஹைப் ஏற்படுத்தும் வகையில் இயக்குநர் ராம்.  காம்பினேஷனே அட்டகாசமாக இருக்கும் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது .பெயர் வைக்கப்படாத அந்த படத்தை production #7 என குறிப்பிட்டுள்ளனர். படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நடிக்க உள்ளார். இது தவிர நடிகர் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆழமான கதைக்களத்தை கையில் எடுத்து , வித்தியாசமான கோணங்களுடன் தனது படைப்புகளை  சாமானியனுக்கும் கொண்டு சேர்ப்பவர் இயக்குநர் ராம் . இவரது இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற திரைப்படங்கள் எக்காலத்துக்கும் அலுக்காத படங்கள் என்றால் மிகையில்லை. அவை அனைத்தும் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.  இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பேரன்பு’. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்திருந்தார். மாறுபட்ட   மற்றும் ஆழமான கதைக்களத்துடன்  வெளியான இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாள ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். மேலும் தங்க மீன்கள் படத்தில் நடித்த சிறுமி சாதனா , இந்த படத்தில் ஆட்டிச நிலையாளரான குழந்தையாக நடித்திருந்தார். பேரன்பு திரைப்படம் பல சர்வதேச திரையரங்குகளில் திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் ராம் இயக்கத்தில் உருவாகி வரும்  production #7  படம் தமிழ் மற்றும் மலையாளம் என பைலிங்குவலாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பேரன்பு படத்திற்கு மலையாள ரசிகர்கள் கொடுத்த வரவேற்பே இந்த முடிவுக்கு காரணமாம்.  நிவின் பாலியின் நேரம் படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு நேரடியாக ‘ரிச்சி’ என்னும் தமிழ் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் ராமுடன் அவர் இணைந்திருப்பதால் நிச்சயம்  நிவினுக்கு இந்த படம் கைக்கொடுக்கும் என நம்பப்படுகிறது