நீ வருவாய் என படத்தின் 2ஆம் பாக கதையை எழுதி வருவதாகவும், விரைவில் இப்படம் உருவாகும் என இயக்குநர் ராஜகுமாரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


நீ வருவாய் என படம்


இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த ராஜகுமாரன், 1999 ஆம் ஆண்டு வெளியான ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில்  பார்த்திபன், தேவயானி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்த நீ வருவாய் என படத்தில் நடிகர் அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 


கிராமத்தில் உள்ள வங்கியில் மேலாளராக  வரும் பார்த்திபன் அதே ஊரைச் சேர்ந்த தேவயானியை காதலிக்கிறார். ஆனால் அவரோ பார்த்திபனை காதலிக்காமல் அவரது கண்களை மட்டுமே காதலிக்கிறார். அதற்கு காரணம் என்ன? என்பதை சுவாரஸ்யமாக படம் சொல்லியிருந்தது. 



விஜய்க்காக எழுதப்பட்ட கதை 


முதலில் பார்த்திபன்  நடித்த கேரக்டரில் நடிக்க விஜய் தான் அணுகப்பட்டார். ஆனால் தன்னிடம் கால்ஷூட் இல்லாத காரணத்தால் ,அஜித் கேரக்டரில் வேண்டுமானால் நடிக்க 15 நாட்கள் தேதி ஒதுக்கி தருகிறேன் என சொல்லியுள்ளார். ஆனால் தனது கேரக்டரை விட்டுக் கொடுக்க அஜித் மறுத்து விட்டார். அதன்பின் பார்த்திபன் கமிட்டானதால் விஜய்க்காக எழுதிய கதையில் சில மாற்றங்கள் செய்தேன் என ராஜகுமாரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். 


இப்படியான நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நீ வருவாய் என படத்தின் 2ஆம் பாக கதையை எழுதி வருவதாக ராஜகுமாரன் கூறியுள்ளார். அவர் அந்த நேர்காணலில், “ விரைவில் படமெடுக்கப் போகிறேன். அதில் ஒரே ஒரு காட்சியாவது அஜித் நடிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். கதையோட நாயகி, என்னுடைய மகளான இனியா தான் ஹீரோயின். இதேபோல் ஹீரோவின் வேடத்திற்கு நடிகர் விஜய்யின் மகன் ‘ஜேசன் சஞ்சய்’ மற்றும் சுவலட்சுமி கேரக்டருக்கு ‘கனிஷ்கா விக்ரமன்’ ஆகியோரை நடிக்க வைக்கலாம் என விரும்புவதாகவும் கூறினார். 


விஜய் பாதையை பின்பற்றும் ஜேசன் சஞ்சய் 


முதல் படத்தின் தொடர்ச்சிக்காக  தேவயானியும் படத்தில் வருவார். கிட்டதட்ட 10 இடங்களில் கண்கலங்க வைக்கும் அளவுக்கு கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கவே சினிமாவில் தனது அப்பாவின் பாதையை பின்பற்றி வரும் விஜய்யின் மகன் ஜேசன், இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.   சமீபத்தில் ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார். மேலும்,  சஞ்சய் திரைப்படத் துறையில் நுழைய விரும்புவதாகவும், பல முன்னணி இயக்குநர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகியதாகவும் விஜய் கடந்தாண்டு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.