மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 15) கடைசித் தேதி ஆகும்.


முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர் ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 


அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளன. விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி ஆகும். 


மத்திய,  மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 


யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?


சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் யாரும் ட்யூஷன் எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருக்கக் கூடாது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பத் தகுதியானவர்கள் அல்ல. எனினும் இந்த கல்வியாண்டில் குறிப்பிட்ட அளவுக்குப் பணியாற்றி இருந்து (ஏப்ரல் 30) பிற தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் தவிர்த்து, கல்வித்துறையின் பிற ஊழியர்கள், மேல் அதிகாரிகள் யாரும் விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடியாது.  


தேர்வு எப்படி?


இவற்றுக்கு 100-க்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். மீதமுள்ள 90 மதிப்பெண்கள் கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல், புதுமையாக மேற்கொள்ளப்படும்  முயற்சிகள், கூடுதல் மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகள், கற்பித்தல் - கற்றல் பொருட்களின் பயன்பாடு, சமூக இயக்கம், அனுபவக் கற்றலை உறுதி செய்தல், மாணவர்களுக்கு உடற்கல்வியை உறுதி செய்வதற்கான தனித்துவமான வழிகள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.


முதலில் மாநில அரசு, ஆசிரியர்களைத் தேர்வு செய்து பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். அதில் இருந்து மத்திய அரசு தனிச்சிறப்பான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும். இதன்படி 2023ஆம் ஆண்டு 154 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. 


முக்கியத் தேதிகள் 


 விருதுக்கு ஆசிரியர்கள் இன்று வரை (ஜூலை 15) விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகு மாவட்டத் தேர்வுக் குழு மற்றும் மாநிலத் தேர்வுக் குழு இணைந்து ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும். பிறகு மத்தியத் தேர்வுக் குழு பரிசீலனைக்குப் பிறகு ஆகஸ்ட் 16 முதல் 18 வரை தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அறிவிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் டெல்லிக்கு நேரில் அழைக்கப்பட்டு, செப்டம்பர் 4ஆம் தேதி ஒத்திகை நடைபெறும். அடுத்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.


தேர்வு வழிமுறைகளை முழுமையாகவும் விரிவாகவும் காண https://nationalawardstoteachers.education.gov.in/Guidelines.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


முழு விவரங்களைக் காண: https://nationalawardstoteachers.education.gov.in/