பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. 


 யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாபா பிளாக்‌ ஷீப்’. இந்த படமானது குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், அயாஸ் நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி 
'விருமாண்டி' அபிராமி ,RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், சேட்டை ஷெரீப், மதுரை முத்து, கேபிஒய் பழனி , சுந்தர், நக்கலைட்ஸ் பிரசன்னா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 


சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த், தனிக்கொடி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர். முன்னதாக இயக்குநர் ராஜ்மோகன் படத்தைப் பற்றி பேசும்போது, பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள்,இன்பங்கள்,  துன்பங்கள் என எல்லாம் நிறைந்தப் படமாக “பாபா பிளாக்‌ ஷீப்” இருக்கும் என தெரிவித்திருந்தார். 



இதனிடையே விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினரோடு தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சிப் போல இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் இப்படத்தின் மூலம் பெரிய திரைக்கு  அறிமுகமாகும் புதுமுகங்களை,  தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு  அறிமுகப்படுத்தினர். 


அதன்படி இயக்குனர் ராஜ் மோகன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாராலும், ஹீரோ நரேந்திரபிரசாத்தை  இயக்குநர் லிங்குசாமியும், அயாஸை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம், குட்டி மூஞ்சி விவேக்கை நடிகர் இளவரசும், ராம் நிஷாந்த்தை நடிகர் மணிகண்டனும் அறிமுகம் செய்தனர். இதேபோல் பிரகதீஸ்வரனை இயக்குனர் ஓபேலி கிருஷ்ணாவும், குட்டி வினோவை நடிகர் பஞ்சு சுப்புவும், சேட்டை ஷெரீப்பை நடிகை வாணி போஜனும் அறிமுகம் செய்தனர்.


இணையத்தில் வெளியான குறுகிய நேரத்தில் டிரெய்லர், பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.