பிரபல இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜன், தான் நடிக்க வந்ததற்கு கவுண்டமணி தான் காரணம் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றிக் காணலாம்.
வெற்றி இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்
1982ம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.சுந்தர்ராஜன். ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், பார்த்திபன், முரளி என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கினார். அதன்பின்னர் நடிகராக இன்றளவும் சினிமாவில் இயங்கி வருகிறார். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அண்ணாமலை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், ‘நான் நடிக்க வந்தது எதிர்பாராமல் அமைந்த ஒன்றாகும். இப்போதும் நான் போன் எடுத்தால் இயக்குநர் சுந்தர்ராஜன் பேசுகிறேன் என சொல்கிறேன். ஒருபோதும் நடிகர் என குறிப்பிடமாட்டேன். சினிமாவில் கூட இயக்குநர் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வில் தான் கவனம் செலுத்துவேன். ஏனென்றால் இயக்குநர் என்பது என்னுடைய அடையாளம். எல்லா நடிகர்களுக்கும் ஒரு படம் இயக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசையால் நான் நடிகர் ஆகவில்லை.
எனினும் ஒரு இடத்தை நிரப்ப என்னுடைய நடிப்பு தேவைப்பட்டதால் அப்படி தொடங்கினேன். அதற்கு உண்மையான காரணம் கவுண்டமணி தான். என்னுடைய பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் ஆகிய படங்களில் கவுண்டமணி நடித்திருப்பார்.
இதன்பிறகு அவர் ஹீரோவாக ‘பணம் பத்தும் செய்யும்’ என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் நான் குங்குமச்சிமிழ் படத்துக்காக குப்பிட்டபோது வர மறுத்து விட்டார். அதேபோல் அம்மன் கோயில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு படத்துக்கும் முடியாது என கூறி விட்டார். அவர் என்ன சம்பளம் பெற்றார், எப்படி சினிமாவில் வளர்ந்தார், என்னுடைய படங்கள் அவருக்கு எப்படி பெயர் வாங்கி கொடுத்தது என்பது தெரியும்.
படங்களில் நடிக்க சொன்ன ரஜினி
அந்த நேரம் வாங்கிய சம்பளத்தை என்னிடம் கேட்டு பெற முடியாது என நினைத்திருக்கலாம். இல்லையென்றால் நாம் தான் ஹீரோவாகி விட்டோமே இனி ஏன் காமெடியனாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கலாம். அதனால் 3 படங்களில் செந்திலை போட்டு நடிக்க வைத்தோம். ஆனால் எடுபடவில்லை. கவுண்டமணியின் பலம் இதில் வரவில்லை. அவர் இடத்தில் ஜனகராஜை போட்டு நடிக்க வைத்தாலும் அந்த திருப்தி வரல..
ரஜினி, இளையராஜா, மனோராமா போன்றவர்களும் என்னை நடிக்க சொல்லி சொன்னார்கள். சரி என திருமதி பழனிசாமி படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இதற்கிடையில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக செல்லவில்லை என்பதால் அவர் மீண்டும் காமெடிக்குள் வந்தார். எனினும் திருமதி பழனிசாமி படத்தில் எனக்கென ஒரு காமெடி கேரக்டர் சொன்னேன். பின்னர் கவுண்டமணியும் அந்த படத்தில் நடித்தார்.
பின்னர் என் ஆசை மச்சான் படத்தில் நான் மட்டும் நடிக்க அதைப் பார்த்து தான் நடிக்க வாய்ப்பு வந்தது என ஆர்.சுந்தர்ராஜன் தெரிவித்தார்.