இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது, குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக, நம் நாட்டின் இரண்டாவது உயரிய பதவி ஆகும்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை என்ற நிலையில், 452 வாக்குகளை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்க உள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
சொந்த ஊர், குடும்பம்
சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு மண்டலத்தில், திருப்பூர் மாவட்டம், சந்திராபுரத்தைச் சேர்ந்தவர். 1957ஆம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணனின் தந்தை பொன்னுசாமி, தாய் ஜானகி ஆவர். 1985ஆம் ஆண்டு சுமதி என்பவரை சிபிஆர் மணந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆர்எஎஸ்எஸ் பின்புலம்
16 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த ராதாகிருஷ்ணன், பாரதிய ஜன சங்கத்திலும் இருந்துள்ளார். பின்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிபிஆர் 1996-ல் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முக்கியக் காரணமாக இருந்தார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அரசு உயர் பதவிகள்
கட்சிப் பொறுப்புகளைத் தொடர்ந்து, அரசுப் பொறுப்புகளையும் சி.பி.ஆர். வகித்துள்ளார். இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநராகவும் பதவியேற்றார்.
தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றிய அவர், கடைசியாக மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இது தமிழருக்குக் கிடைத்த கவுரவம் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக குடியரசு துணைத் தலைவர் ஆக இருந்த ஜெகதீப் தன்கர், தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் எதிர்க் கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் இறங்கினார். இந்தத் தேர்தல் இன்று (செப்.9) காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.