நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என இயக்குநர் பிரவீன் காந்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், அடுத்ததாக அரசியலில் களமிறங்க உள்ளதாக வெளியான தகவல்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் கையிலெடுத்து வந்தார். தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்கும் விஜய், பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். 


இன்னும் சில நாட்களில் அவர் தனது கட்சி பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில், இயக்குநர் பிரவீன் காந்தி விஜய்யின் அரசியல் பற்றி பல விஷயங்களை தெரிவித்துள்ளார். 


அதாவது, “விஜய் அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம். அவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எப்படி செயல்படலாம் என என்னை கேட்டால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சியை ஆதரிக்கலாம், தேவைப்பட்டால் பிரச்சாரம் செய்யலாம். இங்கு ஆள் இல்லை. விஜய் கண்டிப்பாக வர வேண்டும். அவருக்கென்று ஒரு வசீகரம் உள்ளது. சுமாரான படத்தை ரூ.400 கோடி வரவச்சிருக்காருன்னா நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஜெயிலரை விட முந்த வேண்டும், அஜித்தை வழக்கம்போல ஜெயிக்க வேண்டும், அரசியலுக்கு வர வேண்டும் என்றால் வெற்றி தேவை என்ற 3 காரணங்களுக்காக விஜய் ரசிகர்கள் அந்த படத்தை ஓட வைத்தார்கள். 


விஜயகாந்துக்கு இப்படி ஒரு கூட்டம் வரும் என யாரும் எதிர்பார்த்தார்களா? இல்லையே. ஏன் சின்ன விஜயகாந்தா விஜய் வரக்கூடாது?. வாய்ப்பு இருக்குது. விஜயகாந்த் மகன்கள் மீது அனைவரது கவனம் திரும்பியுள்ளது. அன்பு தான் வந்துள்ளதே தவிர நம்பிக்கை வரவில்லை. அதற்கு 10, 15 ஆண்டுகள் ஆகலாம். ஆந்திராவில் பவண் கல்யாண், சிரஞ்சீவி எல்லாம் கூட்டணியை தவறாக போட்டு விட்டார்கள். மேலும் அங்கு ஸ்ட்ராங்கான நபர்கள் எல்லாம் இருக்கிறார்கள். 


ஆனால் இங்கு ஆள் இல்லை. உதயநிதி ஸ்டாலின் எல்லாம் பத்தாது. நீங்கள் திமுகவின் வாக்கு வங்கியை வச்சி எல்லாம் ஓட்டலாம். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்னு மக்களுக்கு பிடிக்கணும் அல்லது பணத்தை திணிக்கனும். எத்தனை நாளைக்கு பணத்தை திணிப்பீர்கள். விஜய் சொன்னாலே போதும். 2047 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகுமுன்னு சொல்றாங்க. அதோட ஆரம்ப புள்ளி தமிழனா தான் இருப்பாங்க. 


எம்ஜிஆர் கூட அண்ணாவின் புகைப்படத்தை தான் பயன்படுத்தினார். அதனால் விஜய் தனது புகைப்படத்தை முன்னிலைப்படுத்த மாட்டார். அவரின் அரசியல் வருகை சாதாரணமாக இருக்காது. 2031ல் 40,50 சீட் கேட்டு கூட்டணியில் இருப்பார். 2036ல் தனியாக நிற்பார்" என பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.