பிரவீன் காந்தி
ரட்சகன், ஸ்டார் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பிரவீன் காந்தி. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. வெற்றிமாறன் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் வருகைக்குப் பின் தான் தமிழ் சினிமா தளர்ச்சி கண்டது என்று அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரவீன் காந்தி பழைய நேர்காணல் ஒன்றில் தற்போது தான் பேசியதற்கு நேர்மாறாக அவர் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
‘80களில் சாதி கிடையாது’
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரவீன் காந்தி “வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்களின் வருகைக்குப் பிறகு சாதியை வைத்து காசு பார்க்கும்போக்கு அதிகரித்திருக்கிறது. இன்று சினிமாவில் இரண்டு வகையான படங்களே வெளிவருகின்றன. சாதியை வைத்து ரசிகர்களை ஈர்க்கும் ஒரு வகை படங்கள். மிகைப்படுத்தப்பட்ட நாயகர்களை வைத்து வரும் கமர்ஷியல் படங்கள் இன்னொரு வகை. இதனால் ரசிகர்கள் மனதில் இன்று ஒரு விதமான சலிப்பு உருவாகியிருக்கிறது. இதன் காரணமாகதான் அவர்கள் மலையாள சினிமாவை நோக்கி நகர்ந்துவிட்டார்கள்.
வெற்றிமாறன், ரஞ்சித், முத்தையா, மோகன்ஜி போன்ற இயக்குநர் எல்லாம் ஒரே மாதிரியான படங்களை தான் இயக்குகிறார்கள். வெற்றிமாறன் மற்றும் ரஞ்சித் என்றோ நடந்த பழைய கதைகளைக் கொண்டு வந்து சினிமாவிற்குள் சாதியை திணிக்கிறார்கள். இவர்களின் வருகைக்கு முன்பு நாங்கள் உதவி இயக்குநராக இருந்த 1980 மற்றும் 90 களில் சினிமாவில் யாரும் சாதியைப் பார்த்தது இல்லை” என்று பேசினார்.
வசமாக மாட்டிய பிரவீன் காந்தி
பிரவீன் காந்தியின் இந்தக் கருத்தைத் தொடந்து இதே நிகழ்ச்சியில் முன்பொரு முறை அவர் பேசிய கருத்தொன்றை சுட்டிக்காட்டினார் தனியார் ஊடகவியலாளர். அதில் பிரவீன் காந்தி “ சினிமாவிற்குள் நுழையும் போதே உங்கள் முதுகைத் தடவிப் பார்த்து கயிறு இருக்கிறதா இல்லையா என்று பார்த்து தான் வரவேற்பார்கள்" என்று கூறியுள்ளார். இப்படி பேசிய இதே பிரவீன் காந்தி தற்போது அந்த காலத்தில் சாதி இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இதற்கு பதிலளித்த பிரவீன் காந்தி “அன்று நான் குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படி செய்தார்கள் என்று. பாலச்சந்தர் போன்ற இயக்குநர்கள் தங்களது சாதியை வைத்து படம் எடுத்தார்கள். அரங்கேற்றம் என்கிற படத்தில் தங்களது சாதிக்குள் படும் கஷ்டத்தை அவர் படமாக எடுத்தார். ஆனால் இவர்களில் யாரும் இன்னொரு சாதியினர் தங்களை கொடுமைப்படுத்தினார்கள் என்று படம் எடுக்கவில்லை.” என்று கூறினார்.
இந்நிலையில், பிரவீன் காந்தி இப்படி மாற்றி மாற்றி பேசுவதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.