பிரசாந்த் நீல்
கன்னட சினிமாவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அடையாளம் காட்டியவர் இயக்குநர் பிரசாந்த் நீல். நல்ல படங்கள் வெளியானாலும் மற்ற மொழி ரசிகர்கள் கன்னட சினிமா பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணம் என கே.ஜி.எஃப் படத்தை கூறலாம். கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாவது பாகம் பான் இந்திய வசூல் சாதனை படைத்தன. தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக நல்ல வெற்றிப்படமாக அமைந்தாலும் இப்படம் எதிர்பார்த்த அளவு மக்களால் பேசப்படவில்லை. அடுத்தபடியாக சலார் 2 படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இது குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
சலார் 2 பற்றி பிரசாந்த் நீல்
" வெறும் கத்தியும் துப்பாக்கிச் சண்டையும் நம்பி நான் சலார் படத்தை இயக்கவில்லை. தாயும் மகனும் போன்ற பாசத்தோடு இருந்த இரு நண்பர்கள் ஒரு தவறான புரிதலில் எதிரிகளாக மாறுகிறார்கள். அது என்ன காரணம் என்பதை இரண்டாம் பாகத்தில் பார்ப்பீர்கள். சலார் முதல் பாகத்தைப் பொறுத்தவரை நான் அந்த படத்திற்கு செலுத்திய உழைப்பிற்கு தகுந்த பாராட்டு கிடைக்கவில்லை. அதனால் சலார் 2 படத்தை என்னுடைய சிறந்த படமாக இயக்க முடிவு செய்திருக்கிறேன். இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் திரைக்கதை நான் இதுவரை இயக்கிய படங்களை காட்டிலும் சிறந்த ஒன்றாக இருக்கும் . இப்படம் குறித்து ரசிகர்களுக்கு இருக்கும் எல்லா எதிர்பார்ப்புகளையும் கடந்து இப்படம் இருக்கும். என் வாழ்க்கையில் நான் வெகு சில விஷயங்களில் தான் உறுதியாக இருந்திருக்கிறேன். அந்த வகையில் சலார் 2 திரைப்படம் என்னுடைய சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை" என பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்