கோமாளி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் என்பதை அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “கோமாளி”. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். அறிமுக இயக்குநராக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். மேலும் படத்தின் ஆட்டோ ஓட்டுநராக ஒரு காட்சியில் தோன்றியிருப்பார்.
16 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஒருவர் மீண்டு வரும் போது தற்காலம் எவ்வாறு மாறியிருக்கிற்சது என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் எவ்வாறு உறவுகளிடம் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பதையும் காமெடியுடன் சொல்லி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கோமாளி கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் 2வது படமாக தற்போது “லவ் டுடே” படம் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக இவானா நடிக்க சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
லவ் டுடே படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்த நிலையில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டர்களில் படம் ரிலீசாகவுள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் கோமாளி படத்தின் கதையை முதலில் எழுதியபோது அதில் நடிகர் பிரபுதேவாவை நடிக்க வைக்கவே விருப்பப்பட்டேன்.
அதற்கு காரணம் அந்நேரம் வேல்ஸ் நிறுவனமும் பிரபுதேவா அவர்களும் இணைந்து படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். பிரபுதேவாவிடம் கதை சொன்ன போது அவர் என்னை ஒரு காட்சியை மட்டும் படம்பிடித்து எடுத்து வரச் சொல்லி பரிசோதனை வைத்தார். அப்படி நான் ஷூட் செய்த காட்சி அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் அவருடைய நடிப்பில் உருவாகாமல் பின் ஜெயம் ரவி நடிப்பில் உருவானது என பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.