தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு நடிகர் பிரேம்ஜி அமரன் வெளியிட்ட பதிவிற்கு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அளித்துள்ள பதில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் வெளியானது. 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீணா ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் வசூலில் ரூ.50 கோடியை கடந்து கோலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்திருந்த நிலையில், லவ் டுடேவால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்கம், நடிப்பு மட்டுமின்றி பாடல், வசனம், திரைக்கதை ஆகிய துறைகளிலும் பிரதீப் தனது திறமையை காட்டியுள்ளார். இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய சமூக வலைத்தளப் பதிவுகள் மீண்டும் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு கடும் சர்ச்சைகளை சந்தித்தது.
இதனால் அவர் தனது பேஸ்புக்கில் இருந்து விலகினார். அதேபோல் அவர் தனது வாட்ஸ்அப் காதல் என்ற குறும்படத்தை ட்விட்டரில் அனைத்து பிரபலங்களுக்கும் பகிர்ந்து, “இது என்னுடைய ஷார்ட் ஃபிலிம். பிடித்திருந்தால் லைக் செய்து ஷேர் செய்யுங்கள் என தெரிவித்திருந்தார். அதில் நடிகர் பிரேம்ஜியும் ஒருவர். இந்நிலையில் தற்போது பகிரப்படும் பதிவை பார்த்த நடிகர் பிரேம்ஜி, சார் எனக்கு உங்களின் அடுத்தப் படத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டிருந்தார்.
இதைப் பார்த்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், மிக்க நன்றி சார். இதைப் பதிவிட பெரிய மனம் வேண்டும். நான் உங்களிடம் "என்ன கொடுமா சார் இது" என்று சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்ளிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.