மைனா படத்தின் ஷூட்டிங் சீரியலை விட மோசமாக நடந்ததாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிரபுசாலமன் தெரிவித்துள்ளார். 


கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த், அமலா பால, சூசன், தம்பி ராமையா, பாஸ்கர், என பலர் நடிப்பில் வெளியான படம் “மைனா”. டி.இமான் இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் தியேட்டர்களில் வெளியிட்டது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


கண்ணோடு காண்பதெல்லாம், கொக்கி, லீ, லாடம் என பல படங்களை இயக்கியிருந்தாலும் பிரபு சாலமனுக்கு மைனா படம் தான் திருப்பு முனையாக அமைந்தது. அதேசமயம் இன்று எந்த கேரக்டர் கொடுத்தாலும் கலக்கி வரும் விதார்த் ஹீரோவாக அறிமுகமானார். அமலாபால் தமிழ் சினிமாவுக்கு வருகை தந்து அசத்தினார். தம்பி ராமையா குணச்சித்திர நடிகராக கொண்டாடப்பட்டார்.


டி.இமான் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இந்த படம் அனைவருக்கும் வாழ்வளித்தது என்றே சொல்லலாம். குறிப்பாக தம்பி ராமையாவுக்கு அந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. 


இந்த படம் உருவான கதையை இயக்குநர் பிரபு சாலமன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில், “மைனா படம் பண்ணும்போது என்னிடம் வெறும் கேமரா மட்டும் தான் இருந்துச்சு. லைட்டிங், டிராக் மற்றும் டிராலி வாடகைக்கு எடுக்கக்கூட காசு கிடையாது. ரொம்ப சிக்கனமாக தான் செலவு செய்தோம். ஒருநாளைக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்ய முடிந்தது. என்னிடம் ஒரு கதை இருந்தது, கேமரா இருந்தது. நடிக்க தெரிந்த 4 ஆட்கள் இருந்தால் போதும் என நினைத்தேன். அதேசமயம் நான் இயக்கிய கொக்கி, லீ ஆகிய படங்களில் விதார்த் சின்ன கேரக்டர் பண்ணியிருந்தான்.


டேய், வாடா என் படத்துல நீ தான் ஹீரோ என நான் சொன்னபோது அவன் நம்பவே இல்லை. அதனைத் தொடர்ந்து அமலாபால் தமிழில் அறிமுகமானார். வடிவேலுவுடன் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து கொண்டிருந்த தம்பி ராமையாவை நடிக்க வைத்தேன். இப்படியாக ஆட்களை சேர்த்துக் கொண்டு ஒரு 15 நண்பர்கள் டூர் போகிற மாதிரி தான் போனோம். டிவி சீரியல் ஷூட்டிங் என்றால் ஒரு 60,70 பேர் இருப்பார்கள். ஆனால் நாங்கள் அதைவிட குறைவு தான். யாருடா இந்த குரூப் குறும்படத்தை விட மோசமான ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்தார்கள். ஆனால் நாங்கள் அனைவரும் மிகவும் உண்மையாக உழைத்தோம். படம் முடிக்கும்போது ரூ.2 கோடி பட்ஜெட் வந்துவிட்டது. ஆனால் பாக்ஸ் ஆபீஸில் ரூ.14 கோடி வரை வசூலித்தது” என கூறியிருப்பார்.