புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் வசனம் எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகரும் , இயக்குநருமான பொன்வண்ணன். சிறுவயதில் மேடை நாடகங்கள் , பள்ளி மாறுவேட போட்டிகளில் கலந்துக்கொண்ட பொன்வண்ணனுக்கு சினிமா மீதான ஆர்வம் ஆரம்பத்தில் இருக்கவில்லை. மாறாக அவர் மிகப்பெரிய ஓவியராக வரவேண்டும் என்ற கனவுகளையே சுமந்தவராக இருந்திருக்கிறார். இது குறித்து நடிகர் சித்ரா லக்ஷ்மணன் உடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.
பொன்வண்ணன் கூறியதாவது :
"நான் மிகப்பெரிய ஓவியராக வேண்டும் என்பதுதான் எனது அதிகபட்ச கனவாக இருந்தது. அதோடு கையெழுத்து அப்படிங்குற பத்திரிக்கையும் நடத்தி வந்தேன். அப்போதான் எதிர்பாராத விதமாக எம்.எல்.ஏ விடுதியில் கோவை தம்பி சாரை சந்திச்சேன். அவர் மூலமாகத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். பாரதிராஜா சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்த அந்த 6 படங்கள் செய்த காலக்கட்டம்தான் எனக்கு சிறந்த காலக்கட்டம். சினிமாவில் நான் எத்தனை தூரம் போவேன் எனத் தெரியாது. ஆனாலும் உதவி இயக்குநராக இருந்த அந்த காலக்கட்டத்தை பெஸ்ட் பீரியட் என சொல்வேன். இயக்குநராக அவர் சம்பாதித்து வைத்திருந்த அனைத்தையும், உதவி இயக்குநராக ஒரு விசிட்டிங் கார்ட் போல அடையாளமாக எனக்கு கொடுத்தார். என் வாழ்க்கையில் அதிகபட்ச உயரமாகவும், அதிக பட்ச சந்தோசமாகவும் நான் நினைப்பது இயக்குநர்களுடன் இருந்த காலக்கட்டம்தான். இயக்குநர் பாரதிராஜாவிடம் எனக்கு பிடித்தமான விஷயம் நிறைய இருக்கு. அவர் ஒரு தீவிரமான தீவிரவாதி. பிடிக்கும்னா வீம்பா நிப்பார். பிடிக்கவில்லை என்றால் தூக்கி போட்டுருவாரு. இரண்டுக்குமே அவர் வித்தியாசம் பார்க்க மாட்டார். பாரதிராஜா ஒரு தேடல் மிக்கவர். அவரிடம் நான் இருந்த காலக்கட்டம் வரைக்குமே அதை நான் பார்த்தேன். பாரதிராஜா சார் கூட நான் நிறைய பயணித்தேன். அவர் உதவி ஆசிரியராக எனக்கு கொடுத்த இடம் மிகப்பெரியது. என்னுடைய முகம் , இமேஜ் என சினிமாவில் என்னை செதுக்கியது பாரதிராஜா சார்தான்“ என தெரிவித்துள்ளார் பொன்வண்ணன்.