தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான 'சகாப்தம்' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுர வீரன், தமிழன் என்று சொல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழன் என்று சொல் படத்தில் நடிகர் விஜயகாந்த் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்பதாக இருந்ததால் அப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால் விஜயகாந்த் உடல்நிலை மற்றும் வேறு சில காரணங்களால் அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சண்முக பாண்டியனுக்கு நல்ல ஒரு பெயரை பெற்றுத் தரும் என காத்திருந்தனர். நடிகர் விஜயகாந்த் மறைவால் அப்படம் சற்று ஒத்திவைக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க தயார் எனத் தெரிவித்திருந்த நிலையில், படைத்தலைவன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
ராகவா லாரன்ஸ் போலவே சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடித்து தருவதாக நடிகர் விஷாலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனைப் படமாக விளங்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் உள்ளிட்ட இரண்டு ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் பொன்ராம். எதிர்பாராத விதமாக அவர் இயக்கிய சீமராஜா மற்றும் டிஸ்பி ஆகிய இரண்டு படங்களும் பெரிய அளவு வெற்றி பெறாததால் முன்னணி நடிகர்களை வைத்து அவரால் படங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனால் அடுத்ததாக அவர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர்களை கொடுத்து அவரின் கிராஃப் உயர ஏணிப்படியாய் இருந்தவர் இயக்குநர் பொன்ராம். சண்முகப்பாண்டியுடன் கூட்டணி சேர்வது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
பல இயக்குநர், நடிகர் என புதுமுகங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். அன்று அவர் செய்த அந்த நன்மை இன்று அவரின் மகனுக்கு பலன் கொடுக்கிறது.