திருவள்ளுவருக்கு எந்த கலரில் ஆடை அணிவித்தாலும் பரவாயில்லை. அவர் கையில் இருக்கும் பனை ஓலையை மாற்ற முடியாது. அது தமிழுக்குரியது என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். 


ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பனை”. இந்த படத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, இந்த படத்தின் தலைப்பான பனை என்பதை மண், மக்கள்,கலாச்சார குறியீடாக நினைக்கிறேன். தற்போதைய படத் தலைப்புகளை பார்க்கும்போது துக்கம் ஏற்படுகிறது. ஏன் தமிழில் சொற்களுக்கா பஞ்சம்?. தயவு செய்து தமிழில் பெயர் வையுங்கள்” என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, “இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு, கவிதை, உரையாடலை கேட்கவே பங்கேற்றேன். கவிப்பேரரசு வைரமுத்து என்பது பெயர் அல்ல. தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை, கௌரவம், தவப்புதவன் என சொல்லலாம். அவரிடம் இருந்து ஒரு சில விஷயங்களை நான் ஃபாலோ பண்ணுகிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஹீரோக்களுக்கென்று அறிமுக பாடல்கள் இருக்கும். அந்த பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலிக்கும். ரஜினியின் வந்தேண்டா பால்காரன், ஆட்டோக்காரன் போன்ற பாடல்கள் மக்களிடத்தில் போய் சேரும். ட்யூனுக்கு வரிகளை நிரப்பாமல் மக்களுக்கு என்னென்ன தேவையோ அதை நுழைத்து ஹீரோவுக்கான பாடலாக அமைந்தாலும் அங்கு உண்மையான ஹீரோ வைரமுத்துதான். 


அவரை உன்னிப்பாக கவனித்து வந்த நான் படம் இயக்கும்போது அதுபோன்ற பாடல்களை எல்லாம் எழுதுனேன். வைரமுத்து எழுதுன பாடலை அமைக்க வேண்டும் என நினைத்து திருப்பாச்சி படத்தில் நீயெந்த ஊரு பாடலை எழுதுனேன். என் படங்களில் ஹீரோவுக்கான அறிமுக பாடலை எழுத தூண்டியது வைரமுத்து தான். ட்யூனுக்கு வரிகளை நிரப்புவதை விட, கவிதைகலை நிரப்புபவர் தான் வைரமுத்து.


படத்தின் பெயர் பனை. அன்றைக்கு பனை ஓலை இல்லையென்றால் தமிழில் பெரும்பான்மையான காப்பியங்களே இருந்திருக்காது. திருவள்ளுவருக்கு வெள்ளை ஆடை, காவி ஆடை, கருப்பு ஆடை வேண்டுமானாலும் அணிவிக்கலாம். ஆனால் அவர் கையில் இருக்கும் பனை ஓலையை மாற்ற முடியாது. அந்த சிறப்பு தமிழுக்குரியது” என தெரிவித்துள்ளார்.