தங்கலான்


இயக்குநர் பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கோலார் தங்க வயல்களில் இருக்கும் தங்கத்தை எடுக்க வெள்ளையர்கள் மற்றும் அந்த நிலத்தில் இருந்த பழங்குடி மக்களுக்கும் இடையில் நிகழ்ந்த  ரத்தம் நிறைந்த யுத்தக் காட்சிகளை தங்கலான் படத்தின் டீசர் காட்டுகிறது.  தங்கலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹாலிவுட் படம் ஒன்றை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு ஒரு சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.


கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon)


 இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படம் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி வெளியானது .  லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo Di Caprio) ராபர்ட் டி நிரோ (Robert de niro) , லில்லி கிளாட்ஸ்டோன் (Lily Gladstone) , ஜெஸ்ஸி ப்ளேமன்ஸ் (Jesse Plemons) உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒசேஜ் பிரிவினரின் நிலங்களில் அதிகளவிலான கச்சா எண்ணெய் இருப்பதை தெரிந்துகொள்கிறார்கள் அமெரிக்கர்கள். ஓசேஜ் மக்களிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்ற அமெரிக்கர்கள் எப்படி செயல்பட்டார்கள். அவர்களின் வீட்டுப் பெண்களை திருமணம் செய்து பின் அவர்களை மர்மமான முறையில் கொலை செய்து அவர்களின் சொத்துக்களை கைப்பற்றிய உண்மையக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.


கருப்புத் தங்கம் என்று சொல்லப்படும் கச்சா எண்ணெய்க்காக அமெரிக்கர்கள் ஒசேஜ் இனமக்களுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்தப் படம்.


ஒற்றுமை


இரு படங்களும் ஒரு குறிப்பிட்ட இனத்தை மையப்படுத்தியே உருவாகி இருக்கின்றன. ஒரு நிலத்தின் மக்கள் அந்த நிலத்தில் இருக்கும் வளங்களுக்காக அவர்களின் நிலத்தில் இருந்து விரட்டப்படும்  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இரு நிலத்து மக்களும் தங்களின் பொதுவான எதிரிகளை எதிர்த்து போராடுகிறார்கள். ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான வன்முறையையே நிகழ்த்தி இருக்கிறார்கள்.  வெகு சில மக்கள் கூட்டமே அவர்களை எதிர்த்து போராடி வென்றிருக்கிறார்கள். தங்கலான் திரைப்படம் அப்படியான ஒரு இனத்தில் எதிர்ப்பு போராட்டத்தை சித்தரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


அதே நேரத்தில் Killers Of The Flower Moon படத்தை உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இந்திய மக்களால் கொண்டாடப்படும்  மார்ட்டின் ஸ்கார்செஸி இந்தப் படத்தின் மூலம் சினிமா என்கிற கலை வடிவத்தில் கதை சொல்லல் எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் தங்கலான் மாதிரியான ஒரு முயற்சி எல்லா விதத்திலும் உலக சினிமாக்களுக்கு நிகரான ஒரு கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது.


மக்களின் வரலாற்றை பேசும் இயக்குநர் ரஞ்சித் நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் மற்றுமொரு இனத்தின் வரலாறை சொல்வதில் வெற்றி அடைய  வாழ்த்தை தெரிவிக்கவேண்டியது நம் கடமை.