வசூலை விட படம் தரமானதா என்பதே முக்கியம் என ரெபல் படம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். 


அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். ரெபல் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்,மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘ரெபல்’.அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ளும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை  ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ரெபல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 


இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “என்னுடைய வேலையை நான் சரியாக செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். ரெபல் படத்தின் அனைத்தும் நன்றாக இருக்கிறது. இது மூணார் பகுதியில் நடக்கும் கதை போல் தெரிகிறது. அது எல்லை மற்றும் மொழிப்பிரிவினை நிலவும் பகுதியாகும். அதில் நடத்தப்படும் அரசியல் பற்றி இப்படம் பேசும் என கூறப்படுவதால் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். ஜி.வி.பிரகாஷ்குமார் நீண்ட நாட்களாக திரைத்துறையில் இருந்தாலும் அப்பப்ப பார்க்குறப்ப பேசியிருக்கிறேனே தவிர, இணைந்து வேலை பார்த்தது இல்லை. தங்கலான் படத்தில் தான் இணைந்துள்ளோம். ஜி.வி.பிரகாஷ் எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப ஸ்பெஷலான மனிதர். இசை மட்டுமல்லாமல் ஒரு மனிதருடன் பழகுவதில் சிறந்தவர். அவருடன் வேலை செய்ய எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்துச்சு. தங்கலான் படத்தில் அவரின் உழைப்பை பார்க்கலாம். 


சின்ன படங்கள் தியேட்டர்களில் வெளியிட முடியும், ஆடியன்ஸை வரவைக்க முடியும் என முயற்சி எடுப்பதை பெரிதாக பார்க்கிறேன். சின்ன படங்கள் எடுத்து தியேட்டர் எடுத்து போறது பெரிய விஷயம். நிறைய தயாரிப்பாளர்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. வணிக ரீதியான வெற்றியை விட தரமான விஷயங்களுக்காக பாராட்டு கிடைக்கிறது முக்கியம். அட்டகத்தி படமும் எனக்கு அப்படி தான் அமைந்தது. ஆனால் சமீபத்தில் என்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெளியான ஜே.பேபி படம் வணிக ரீதியான வெற்றியா என கேட்டால் அது எங்களுக்கே சந்தேகமாக இருக்கிறது. தரமான விஷயங்களுக்கான விமர்சனம் அடுத்தடுத்த கட்டத்துக்கு சம்பந்தப்பட்ட கலைஞர்களை வளர உதவும்" என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


தங்கலான் படம் 


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இந்த படம் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் கோலார் தங்க வயல் பகுதியில் வாழ்ந்த தமிழர்களை பற்றியது. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.