இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அடுத்து உருவாகும் கிரிக்கெட்டை மையமாக கொண்ட படத்திற்கு, ப்ளூ ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை, எஸ். ஜெயக்குமார் எழுதி இயக்குகிறார்.
”ப்ளூ ஸ்டார்” திரைப்படம்:
இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள, படத்தின் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிக்கும் புதிய படத்திற்கு ப்ளூ ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டன்களாக உள்ள அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோருக்கு இடையேயான மோதல், அவர்களின் காதல் மற்றும் வாழ்வியலை மையப்படுத்தி இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படக்குழு விவரங்கள்:
எஸ். ஜெயக்குமார் இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். எஸ். ஜெயக்குமார் மற்றும் தமிழ்பிரபா ஆகியோர் சேர்ந்து வசனங்கள் மற்றும் திரைக்கதை எழுதுகின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க, தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோருடன் சேர்ந்து, கீர்த்தி பாண்டியன் பிரித்விராஜன், பகவதி பெருமாள், லிஸ்ஸி ஆண்டனி, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஆந்தம் வெளியிட்ட படக்குழு:
இதனிடையே, ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் படத்தில் இடம்பெறும் ஆந்தம் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ”ஹே பேக் ஆன் தி ஸ்ட்ரீட்ஸ்” என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அறிவு மற்றும் உமா தேவி ஆகியோர் இந்த பாடலை எழுதியுள்ளனர்.
பா. ரஞ்சித்:
அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா. ரஞ்சித், மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து, கபாலி மற்றும் காலா என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இருப்பினும் ஆர்யா நடிப்பில் அவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை பிரமாண்ட வெற்றி பெற்றது. தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வரும் பா. ரஞ்சித், அடுத்ததாக சார்பட்ட பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
தயாரிப்பில் அசத்தல்:
இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார் பா. ரஞ்சித். அந்த படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சமூக பிரச்னைகள் தொடர்பான படங்களை தொடர்ந்து தயாரிக்க தொடங்கினார். அதன்படி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது ப்ளூ ஸ்டார் படத்தை, பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார்.