எனக்கு தெரிஞ்சி ஒருவர் கூட விஜயகாந்த் இறந்த பின்பும் கூட அவரைப் பற்றி மிகைப்படுத்தி பேசவில்லை. சரியாக அவரைப் பற்றி தெரிவித்தார்கள் என இயக்குநர் பி.வாசு தெரிவித்துள்ளார். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு பற்றியும், விஜயகாந்துடனான நினைவுகள் பற்றியும் திரை பிரபலங்கள் நேர்காணல்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பி.வாசு பேசுகையில், “விஜயகாந்தை நான் முதல்முதலாக உதவி இயக்குநராக இருந்தபோது தான் பார்த்தேன். வாகினி ஸ்டூடியோவில் தான் ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது பார்த்தோம். பனியன் போட்டு கருப்பான உருவம், பளிச்சென சிரிப்பு என விஜயகாந்தை பார்க்கும் என்னோட பார்வை இருந்தது. அவரை பார்க்கும் போது சினிமாவுக்கு ஒரு ஹீரோ வர்றாருன்னு மட்டும் நல்லா புரிஞ்சிது. எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தை ஒரு கமர்ஷியல் ஹீரோவா கொண்டு வந்தார்.


அப்போது தமிழ் சினிமாவுக்கு மாஸ் ஹீரோ வந்துட்டாருன்னு புரிஞ்சிது. எனக்கும் சந்தான பாரதிக்கும் பிரிவு வந்த பிறகு, நான் ஆர்.சுந்தரராஜனுக்கு சில வேலைகள் செய்து கொடுத்தேன். அதில் அம்மன் கோயில் கிழக்காலே படத்துக்காக திரைக்கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ராதாவிடம் சவால் விடும் காட்சியில் விஜயகாந்துக்காக ஃபீல் பண்ணி நானும் சுந்தரராஜனும் எழுதுனோம். 


அதன்பிறகு விஜயகாந்தை வைத்து பொன்மனச் செல்வன் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் சோக காட்சியில் அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் அவருக்குள் இருந்த திறமை வெளிவந்தது. அப்படத்தில் மேக்கப் இல்லாமல் ஸ்டைல் இல்லாமல் நடித்திருப்பார். பொன்மனச் செல்வன் படம் ரிலீசான சமயத்தில் விஜயகாந்த் ஆக்‌ஷன் ஹீரோவா மாறிட்டாரு. அதனால் அப்படம் பெரிய அளவில் போகவில்லை. ஆனால் அப்படத்தில் இடம் பெற்ற ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்... ஊருக்கு நீ மகுடம்’ பாடல் எங்கே போனாலும் விஜயகாந்துக்காக ஒலித்தது. 


பின்னர் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் விஜயகாந்துடன் இணைந்தேன். எனக்கு தெரிஞ்சி ஒருவர் கூட விஜயகாந்த் பற்றி மிகைப்படுத்தி சொல்லவில்லை. மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசினர். அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று பார்த்தேன். அவர் சினிமாவை விடாமல் இருந்திருந்தாலோ அல்லது அரசியலுக்கு வரும்போது உடல்நிலை இப்படி இல்லாமல் இருந்திருந்தாலோ விஜயகாந்த் இன்றைக்கு வேற நிலையில் இருந்திருப்பார். அவருக்கென்று தனியிடம் உள்ளது. 


கடந்த ஓராண்டாகவே விஜயகாந்தை பார்க்கும்போதெல்லாம் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவரை பெரிய அளவில் காட்டாமல் இருந்ததற்கு பிரேமலதாவுக்கு பாராட்டியே ஆகணும். ஒருவேளை விஜயகாந்தை நேரில் பார்த்திருந்தால் தொல்லையாக போயிருக்கும். இத்தனை நாள் இருந்தவருக்கு முன்கூட்டியே ஏதாவது நடந்திருக்க கூட வாய்ப்புண்டு. எங்களை போல ரசிகர்கள், கலைஞர்கள், கட்சி தொண்டர்களாலேயே தாங்க முடியவில்லை. விஜயகாந்த் குடும்பம் எப்படித் தாங்குமோ என தெரியவில்லை. அதனை கடவுள் தான் கொடுக்கணும்” என தெரிவித்துள்ளார்.